நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படம் தொடர்பாக தனுஷுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டது ஏன் என்பதற்கு தற்போது நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற பெயரில் ஆவணப்படமாக சமீபத்தில் வெளியானது. முன்னதாக 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா ஓபனாக அறிக்கை வெளியிட்டார்.
அறிக்கையில், தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிப்படைந்திருப்பதாகவும் கூறியிருந்தார். கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகக் கூறிய நயன்தாரா, மேடைகளில் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட தனுஷால் நடந்துகொள்ள முடியாது என்பதை அறிந்திருப்பதாகவும் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை எட்டியுள்ள நிலையில் தனுஷுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டது ஏன் என்பதை தற்போது நயன்தாரா வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், “தனுஷுக்கு எதிராக அறிக்கை விட்டதை ஆவணப்படத்துக்காக நாங்கள் வெளியிடும் ஒரு விளம்பர ஸ்டண்ட் என்று நினைக்கப்படுகிறது. அப்படியல்ல, ஆவணப்படத்துக்காக ‘நானும் ரௌடிதான்’ பட பாடலில் இருந்த 4 வரிகள் மட்டுமே நாங்கள் விரும்பியது.
அந்த வரிகள் எங்கள் வாழ்க்கையை, எங்கள் அன்பை, எங்கள் குழந்தைகளை பற்றி சுருக்கமாகக் கூறுவதால், அது எங்களுக்கு நிறைய அர்த்தம் மிகுந்ததாக இருந்தது. அதனால் அதனை ஆவணப்படத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அதற்கு எங்களுக்கு என்ஓசி கிடைக்கவில்லை. நாங்கள் கடந்து சென்றோம்.
நான் தனுஷிடம் இது தொடர்பாக விஷயங்களை தெளிவுபடுத்த முயன்றேன். என்ஓசி தாராவிட்டாலும் பரவாயில்லை. பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயன்று தனுஷின் மேனேஜர் மூலமாக அவரிடம் பேச விரும்பினேன். எங்கள் மீது தனுஷுக்கு ஏன் கோபம், தவறான புரிதல் எங்கிருந்து தொடங்கியது என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டேன். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஒருவரையொருவர் பார்த்தால் குறைந்தபட்சம் ‘ஹாய்’ சொல்லவாது வேண்டுமல்ல, அதற்காக பேச விரும்பினேன். எத்தனை முறை போனில் அழைத்தாலும், தனுஷ் பேசவே இல்லை.
எனினும், அவர் மீது கோபப்படவில்லை. அதைக் கடந்து சென்றோம். சம்பந்தப்பட்ட பாடலின் வீடியோகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் ஆவணப்பட ட்ரெய்லர் வெளியானதும், அதில் இருந்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பி.டி.எஸ் காட்சிகளுகாக தனுஷ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதலில் அந்த பி.டி.எஸ் காட்சிகள் அதிகாரபூர்வ காட்சிகள் கிடையாது. அது எங்கள் ஃபோன்களிலும் குழுவில் உள்ள மற்றவர்களின் போன்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள். அதிகாரபூர்வ காட்சி இல்லை என்பதால், ரசிகர்களாலும் சக நண்பர்களாலும் மிகவும் மதிக்கப்படும் தனுஷ் போன்ற ஒருவர், அவர் அதை விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் நோட்டீஸ் அனுப்பினார். பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இது நியாயமற்றதாக உணர்ந்தேன், நான் பேச வேண்டியிருந்தது.
உண்மையிலிருந்து மட்டுமே தைரியம் வருகிறது. நான் எதாவது பொய்யை சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே பயப்பட வேண்டும். விஷயங்கள் ஏற்கனவே வெகுதூரம் சென்றுவிட்டன. எனவே, நான் இப்போது பேசவில்லை என்றால், இனி எவருக்கும் எங்களுக்கு ஆதரவாக நிற்க தைரியம் இருக்காது என்பதால் அறிக்கை வெளியிட்டேன்” என்று தனுஷுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டது தொடர்பாக நயன்தாரா பேசினார்.
.