முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை தூக்கிலிட்டு கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியானதை தொடர்ந்து, பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரான பெண்ணைக் கைதுசெய்துள்ளதுடன், 1907ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விலங்குகள் வதை தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.