நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை எந்த ஒரு வெளிநாட்டு அணியும் கைப்பற்றவில்லை.
இந்த ரெக்கார்டை நியூசிலாந்து அணி முடிவுக்கு கொண்டு வந்து கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பை வான்கிடே மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரரான ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே அவர் சொந்த ஊரான அகமதாபாத்திற்கு அவர் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் மும்பை டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல் நல குறைவு காரணமாக அவர் போட்டியில் விளையாடவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் சற்று குடைய தொடங்கியுள்ளன. இதனால் மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
.