Last Updated:

Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News18

நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 420 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் மூலம், அதன் தென் அரைக்கோளப்பகுதியில் எரிமலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து பல விண்கலன்களை அனுப்பி நிலவுடன் அண்மைக்காலமாகவே மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகிறது சீனா. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட Chang’e-4 விண்கலம், இதுவரை எந்த விண்கலமும் செல்லாத சந்திரனின் தொலைதூர பக்கத்துக்கு சென்று ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பியது. இதற்கு அடுத்தக்கட்டமாக, பூமிக்கு அருகே உள்ள நிலவின் பக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் Chang’e-5 திட்டத்தை செயல்படுத்தியது.

அதன்படி, 1970 களில் நாசாவின் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் யூனியனின் விண்கலம் சென்று பாறைகளை சேகரித்த பகுதிக்கு இந்த Chang’e-5 கலம் சென்றது. அங்கிருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கும் அனுப்பியது.

அதில் சேஞ்ச்சைட்-(Y) மற்றும் டைட்டானியம் கலவை Ti2O இன் இரண்டு வெவ்வேறு கட்டமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு பிறகு நிலவிற்கு சென்று மாதிரிகளை எடுத்து வந்து புதிய கனிமங்களை கண்டுபிடித்த மூன்றாவது நாடு என்ற பெருமையை பெற்றது சீனா.

இந்த நிலையில், நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள அப்பல்லோ பேசின் என்று அழைக்கப்படும் பகுதிக்கு சீனா Chang’e-6 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மே மாதம் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், ஜூன் மாதம் தரையிறங்கி அங்கிருந்து பாறைகளை எடுத்து பூமிக்கு அனுப்பியது. மர்மங்கள் நிறைந்த இந்த Apollo basin பகுதியில் இருந்து மாதிரிகள் எடுத்து அனுப்பப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

இந்த நிலையில், Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பாறை மட்டும் சுமார் 420 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை ஆய்வுகளுக்கு உட்படாத பகுதியில் இருந்து கிடைத்துள்ள இந்த பாறைகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிரக எரிமலை நிபுணர் கிறிஸ்டோபர் ஹாமில்டன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தொலைதூர பகுதிகளில் உள்ள பள்ளங்களில் எரிமலையின் வெப்பமான மக்மாக்கள் பாய்ந்தோடி உள்ளதற்கான சான்றாக இந்த பாறை மாதிரிகள் கிடைத்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் பூமிக்கு அருகே உள்ள நிலவின் பகுதிகளில் இதுபோன்ற எந்த எரிமலை பாறைகளின் மாதிரிகளும் கிடைத்ததில்லை. நிலவின் இரண்டு அரை கோளங்களும் ஏன் இப்படி மிகவும் வேறுபட்டுள்ளன என்பது ஒரு மர்மமாகவே உள்ளதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும், நிலவின் தொலைத்தூர பகுதியில் எத்தனை ஆண்டுகள் இந்த எரிமலைகள் செயல்பாட்டில் இருந்தன என்பன குறித்து இனி வரும் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.



Source link