Last Updated:
பெரும்பாலும் இளையராஜா மெட்ரோ நகரங்களில் கச்சேரி நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நெல்லை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இசைஞானி இளையராஜா நெல்லையில் நடத்திய இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வருகிறார். சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் படம் என பாரபட்சம் பார்க்காமல் இன்றைக்கும் அவர் அனைத்து படங்களுக்கு ஹிட் பாடல்களை தருகிறார். வயதாகும் இளையராஜா என்றும் மாறாத சுறுசுறுப்புடன் தனது இசை பணியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
சினிமா படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வெளிநாடுகளிலும், முக்கிய நகரங்களிலும் இசை கச்சேரி நடத்துவதை இளையராஜா வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் திருநெல்வேலியில் மதுரை – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பெரும்பாலும் இளையராஜா மெட்ரோ நகரங்களில் கச்சேரி நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நெல்லை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதனால் தனது இசை நிகழ்ச்சி அனைத்து ஊர்களிலும் நடைபெறும் என்ற அறிவிப்பை இளையராஜா மீண்டும் வெளியிட்டுள்ளார். அடுத்து எந்த ஊர் என்று அவரே ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது!
நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..? pic.twitter.com/JXEVRkMWIv
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 18, 2025
இதற்கு தங்கள் ஊரில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா வரவேண்டும் என ஒவ்வொரு ஊராக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இளையராஜாவின் பதிவு எக்ஸ் தளத்தில் அதிக விருப்பங்களை பெற்றுள்ளது.
January 18, 2025 7:21 PM IST