கோடீஸ்வரர்களைப் பொறுத்தவரையில், இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 107.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் முதல் இடத்திலும், கெளதம் அதானி 78 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்களை தொடர்ந்து சிவ் நாடார், சாவித்ரி ஜிண்டால் குடும்பம், திலீப் ஷங்வி, குமார் பிர்லா, சைரஸ் பூனாவல்லா, குஷால் பால் சிங், ரவி ஜெய்பூரியா, லட்சுமி மிட்டல், ராதாகிஷன் தமானி, உதய் கோடக் மற்றும் அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தங்களது இருப்பை உறுதி செய்கின்றனர்.
இந்த நிலையில், நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரரான பினோத் சவுத்ரி 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.15,000 கோடி நிகர மதிப்புடன் வெற்றிகரமாக தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கிறார். வை வை நூடுல்ஸின் (Wai Wai noodles) நிறுவனரான பினோத் சவுத்ரி, மேகி, இப்பி உள்ளிட்ட முன்னணி நூடுல்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உலகளவில் முத்திரை பதித்திருக்கிறார்.
தனது குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் ஜே.ஆர்.டி.டாடா மற்றும் அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களால் ஈர்க்கப்பட்ட பினோத் சவுத்ரி, தனது தொழில்முனைவோர் பயணத்தை நேபாள தலைநகரான காத்மாண்டுவில் தொடங்கினார். அவர், ஒருமுறை தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டபோது, இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது. இது வை வை நூடுல்ஸ்க்கான யோசனையை அவர் மனதிற்குள் விதைத்துள்ளது. வை வை நூடுல்ஸ் நேபாளம், இந்தியா மற்றும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான நூடுல்ஸாக அறியப்படுகிறது.
பினோத் சவுத்ரியின் தொலைநோக்கு பார்வை நூடுல்ஸ் தாண்டி அவரை பல்வேறு துறைகளில் பயணிக்க வைத்தது. குறிப்பாக, அவர் நேஷனல் பேனாசோனிக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். நேபாளத்தில் சுசூகி கார்களை அறிமுகப்படுத்தினார். மேலும், பேங்கிங், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் அவர் தடம் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கி காசோலையில் ‘மட்டும்’ என்ற சொல் ஏன் எழுதப்படுகிறது தெரியுமா?
இவரது நிறுவனமான சவுத்ரி குழுமம், இந்தியாவின் தாஜ் ஹோட்டல் செயினுடன் இணைந்து 143 ஆடம்பர சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. 2019ஆம் ஆண்டில், துபாயின் தாஜ் ஜுமேரா லேக்ஸ் டவர்ஸை நிர்வகிக்க டாடா குழுமத்துடன் இவரது நிறுவனம் கைகோர்த்தது. மேலும், 2020இல் அதற்காக சிறப்பு விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஃசார்டட் அக்கவுன்டன்ட் படிக்க விரும்பிய பினோத் சவுத்ரி, அவரது தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். நேபாளத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துவரும் அதே வேளையில், தனது குடும்பத் தொழிலை உலகளவில் விரிவடையச் செய்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கியுள்ளார்.
இதையும் படிக்க: ரூஃப்டாப் சூரிய மின்சக்தி… 2 கூடுதல் கட்டண முறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்…!
மேலும் இவர், 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின்போது வீடுகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் கட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் ரூ.20 கோடிக்கும் மேல் நன்கொடை வழங்கி, முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
January 18, 2025 8:42 AM IST