Last Updated:
பவுலர் பந்து வீசும் போது கையை 15 டிகிரி அளவு வரை மடக்கிக் கொள்ளலாம் என்பது ஐசிசி விதியாக உள்ளது
வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரரான ஷகீப் அல்ஹசனுக்கு ஐசிசி பந்து வீசுவதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிகழ்வு சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முன்னாள் கேப்டனான இவர் டெஸ்ட் மற்றும் சர்வதேச t20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்த நிலையில், கடைசியாக அவர் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கு அவர் சம்மதித்தபோதிலும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துவிட்டது. தற்போது ஷகிப் அல் ஹசன் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். சர்ரே அணிக்காக விளையாடும் அவர் பந்து வீசும் போது ஐசிசி விதிகளை மீறியதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு வைத்தது.
இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில் அவர் விதிகளை மீறி பந்து வீசுவது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்து இருக்கிறது. அதாவது பவுலர் பந்து வீசும் போது கையை 15 டிகிரி அளவு வரை மடக்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த நிர்ணயிக்கப்பட்ட விதியை விடவும் ஷகிப் அல்ஹசனின் கை மடங்கியதால் அவர் பந்தை எறிவதாக கருதப்பட்டது.
இதன் அடிப்படையில் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தனது பந்துவீச்சில் மாற்றத்தை கொண்டு வந்து அதன் பின்னர் ஐசிசி- யின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றால் ஷகிப் அல் ஹசன் மீண்டும் பந்து வீசலாம்.
தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இருப்பினும் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டிருப்பது தற்போதைய சூழலில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விரைவில் அவர் தனது பந்து வீச்சு தகுதியை நிரூபிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
December 16, 2024 9:43 PM IST