வாய்தான் உடலின் நுழைவாயில் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உலகத்திலேயே மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோய் பல் சொத்தையும் ஈறு நோயும்தான்.

பல் போய்விட்டால் உடல் ஆரோக்கியமும் குலைந்துவிடும். அப்படியென்றால் பல்லுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

பற்களின் வேலை பேசுவதற்கு மட்டுமின்றி நன்றாக மென்று சாப்பிடுவதற்கு என்பது தெரியும். மென்று சாப்பிடும்போது உணவு நன்றாகக் கூழாகி உள்ளே செல்வதால் உணவு உறிஞ்சப்படுவது எளிதாகிறது. உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், கார்போஹைட்ரேட் என அனைத்தும் உறிஞ்சப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அரைகுறையாக மென்று சாப்பிட்டால் உணவில் உள்ள சத்துகள் அனைத்தும் உறிஞ்சப்படாது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பல் சொத்தை அல்லது ஈறு நோய் இருக்கிறது என்றால் வாயில் பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கும். பாக்டீரியா அதேஇடத்தில் இருக்காது. அது ரத்தஓட்டத்தில் கலந்து உடல் நலத்தைப் பாதிக்கும். .

பல் ஆரோக்கியம்
இனிப்பு சாப்பிட்டால் பல் சொத்தை வரும் என்று கூறுவார்கள். ஆனால், பல் சொத்தைக்கு உணவு மட்டும் காரணமல்ல.
இதில் நான்கு முக்கிய காரணிகள் உள்ளன.
உணவு, நேரம், பாக்டீரியா, மரபணுக்கள் ..

முந்தைய தலைமுறையில் காலை ம‌ற்று‌ம் மாலை ஒரு டீ/காஃபி, மூ‌ன்று வேளை உணவு என்பதே பழக்கவழக்கத்தில் இருந்தது. நமக்குத் தெரியாமலேயே இதில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. அதுதான் மிகவும் ஆபத்து.

இப்போதுள்ள விளம்பரங்களை எல்லாம் பார்த்து, வெறுமனே டீ/காஃபி மட்டுமில்லாமல் அதில் ஒரு பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிடுகிறோம். அதை ஒரு பேஷனாகவும் நினைக்கிறோம்.

அடுத்து காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் ஒரு டீ/காஃபி. அனைத்து அலுவலகங்களிலும் இந்த பழக்கம் இருக்கிறது. அதிலும் டீ மட்டுமில்லாமல் அத்துடன் ஒரு பிஸ்கட்டும் வருகிறது. அதிக வேலைப்பளு இருப்பவர்களுக்கு இது தேவைதான். ஆனால் பல் சொத்தைக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை உணரவேண்டும்.

மதிய உணவுக்குப் பின்னர் மாலையும் ஒரு டீ/காஃபியுடன் ஒரு சமோசா/பஃப்ஸ் என ஏதோவொன்றைச் சாப்பிடுகிறோம். இவ்வாறு நமக்குத் தெரியாமலே கூடுதலாக உணவில் நிறைய சேர்க்கிறோம். இந்த ‘கூடுதல்’ என்பதுதான் ஆபத்து.

அடுத்து காபி குடித்தால் அந்த சுவை நாக்கில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரும் வாய்கொப்புளிப்பதில்லை. சுவை இருக்க வேண்டும்தான், ஆனால், வாயை சுத்தம் செய்யவில்லை என்றால் காஃபி மற்றும் அதில் உள்ள சர்க்கரை சேர்ந்து வாயில் ஒரு படலம் உருவாகும். அது எச்சிலில் கரைந்து உடலுக்குள் செல்ல சற்று நேரமாகும்.

அந்த நேரத்தில் வாயில் பாக்டீரியா தயாராக இருக்கும். அது அந்த சர்க்கரையை சாப்பிட்டு ஒரு அமிலத்தைச் சுரக்கும். இதுதான் பற்களை அரிக்க ஆரம்பிக்கிறது.

ஆனால், அந்த அமிலம் பற்களை அரிக்கத் தொடங்கும்முன், எச்சில் அதில் இறங்கி அந்த அமிலத்தன்மையை சமநிலை ஆக்கிவிடும். இது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்.

வாய் கொப்புளித்தாலுமே பற்களில் ஆங்காங்கே உணவுத் துகள்கள் இருக்கத்தான் செய்யும். பாக்டீரியாக்களுக்கு இதுவே போதுமானது.

காலை உணவுக்குப்பின், மதிய உணவுக்குப்பின் வாய் கொப்புளிக்கும் நாம், அலுவலகத்தில் ஒரு காஃபி/டீ அல்லது பிஸ்கட் சாப்பிட்ட பிறகு வாய் கொப்புளிப்பதில்லை. அதற்கு யாருக்கும் நேரமும் இருப்பதில்லை. இவ்வாறு இருந்தால் பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஆகவே, முன்பைவிட நாம் இப்போது சாப்பிடும் உணவின் அளவு அதிகமாக உள்ளது. உணவுகளுக்கு இடையே நாம் டீ/காஃபி, நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொள்கிறோம்.

எனவே, தொடர்ந்து சாப்பிடுவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மூலமாக பல் சொத்தை ஏற்படுகிறது. ஒரு முறை பல் சொத்தை வந்துவிட்டால் அந்த இடத்தில் பாக்டீரியா தங்கிவிடும். நீங்கள் பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போகாது. அது பெரிதாகிக்கொண்டே போகும். அப்போது பற்களின் சொத்தையை அடைத்தல் அ‌ல்லது பல்லையே எடுத்தல் மட்டுமே தீர்வு.



Source link