மத்ரஸா மாணவர்கள் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பாக மாவடிப்பள்ளி பகுதிக்கு விஜயம் செய்துள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவின் ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திகவின் வழிகாட்டலில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் காரைதீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர். தொடர் மழை காரணமாக அப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் காணப்பட்டதாகவும் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பெட்டி சுமார் 150 மீற்றர் வேகத்தில் தனித்துப் பயணித்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், விபத்து நடைபெற்றபோது அங்கு என்ன நடந்தது? யார் யார் பயணித்தார்கள் போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 26 திகதி செவ்வாய்க்கிழமையன்று நிந்தவூரிலிருந்து சம்மாந்துறை நோக்கி 12 பேருடன் பயணித்த உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளானமை யாவரும் அறிந்த விடயம். இந்த சம்பவத்தில், நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்களும் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில், இதுவரை மொத்தம் 08 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டதன் பின்னர், சடலங்கள் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, இந்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு ஆரம்பித்துள்ளது.

The post பல உயிர்களை காவுகொண்ட மாவடிப்பள்ளி அனர்த்த இடம் appeared first on Thinakaran.



Source link