எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதேவேளை, தனியார் பஸ் கட்டணத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு, பெற்றோலின் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் போதாதென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருளின் விலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டிருந்தது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 309 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 188 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post பஸ், ஆட்டோ கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை appeared first on Thinakaran.