பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், சுமார் 24 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில், பெஷாவருக்கு செல்லும் ரயில், பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில், சுமார் 20 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அதில், பலூசிஸ்தான் விடுதலை அமைப்பினர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 46-ஐக் கடந்துள்ளது. தாக்குதல் நடந்த போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் வரை இருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

தற்கொலைப் படைத் தாக்குதல் தான் என்பது ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள். பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை அகற்ற பாதுகாப்புப் படை உறுதியாக இருக்கிறது” என்று கூறினார்.

விளம்பரம்

.





Source link