மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி மிகவும் முன்னுதாரணமான பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இன்று(01) இடம்பெற்ற புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

புதிய உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கும் பின்புலத்தில் பாராளுமன்றப் பணியாட் தொகுதியினரின் பணியைப் பாராட்டிய சபாநாயகர், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனித்துவமான அடையாளத்துடன் கூடிய பாராளுமன்றத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் பாராளுமன்றத்தின் வகிபாகம் முக்கியமானது என்றும், பாராளுமன்றத்தின் நோக்கத்தில் மதிப்பைச் சேர்ப்பதற்கு வெளிப்படைத் தன்மை, வினைத்திறன் போன்ற விசேடமான அம்சங்களை மேம்படுத்தி தமது பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் இங்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர குறிப்பிடுகையில், நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படும் ஆண்டான 2025 ஆம் ஆண்டில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.

பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியினர் இதுவரை ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டின் உயரிய நிறுவனமான பாராளுமன்றத்தில் பணியாற்றும் அனைவரினதும் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

புதிய வருடத்தின் தொடக்கத்தில், சிறந்த அணுகுமுறைகளுடன் மிகவும் திறமையான சேவையை வழங்குவதன் மூலம் இலங்கையின் பெயர் உலகளாவிய ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என அவர் வாழ்த்தினார்.



Source link