Last Updated:
பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கும் துணிச்சல் பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை, புகழ்பெற்ற கோண்டோலா சவாரிகள், எண்ணிக்கையற்ற கால்வாய்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு பெயர் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று வெனிஸ். தற்போது முக்கியமானதொரு பிரச்சினையை வெனிஸ் நகரம் எதிர்கொண்டு வருகிறது. அதுதான் பிக்பாக்கெட் (பணம் திருடுபோதல்). அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பிரச்சனையில் சிக்கி திணறி வரும் நிலையில், 58 வயதான பெண் ஒருவர், தன்னந்தனியாக வெனிஸ் நகரத்தில் நிலவும் பிக்பாக்கெட்டுகளுக்கு எதிராக சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து வருகிறார்.
சமீபத்தில், மோனிகா பாலி வெனிஸின் ரியால்டோ பாலம் அருகே தனது ரோந்துப் பணியைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிக்பாக்கெட்டுகள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேரைக் கண்டுபிடித்தார். “கவனமாக இருங்கள், பிக்பாக்கெட்!” என்ற தனது கையொப்ப எச்சரிக்கை வாசகத்துடன், இத்தாலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் குரலெலுப்பியபடி, நெரிசலான தெருக்களில் திருடர்கள் இருப்பதை எச்சரித்து வருகிறார்.
இவரது செயல்பாடுகள் உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன, பலர் இவரது முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “அவர் செய்யும் பணி மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர் செய்யும் உதவிக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த பிக்பாக்கெட்டுகள் ஒரு உண்மையான பிரச்சனை” என்று ஒரு பிரெஞ்சு சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.
“கவனம் சிதறாத குடிமக்கள்” என்ற தன்னார்வக் குழுவில் உறுப்பினராக உள்ள மோனிகா, பிக்பாக்கெட்டுகளை கண்டுபிடிப்பதற்காக வெனிஸ் தெருக்களில் ரோந்து செல்வதில் தனது நேரத்தை செலவிடுகிறார். 2023-ம் ஆண்டில், பாலி தனது முதல் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோது அவரது முயற்சிகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இவரது வீடியோக்கள் டிக்டாக்கில் பல லைக்குகள் மற்றும் பார்வைகளைப் பெற்றது. இன்று சோசியல் மீடியாவில் புகழ்ப்பெற்ற நபராக இருப்பதோடு, அவரது வீடியோக்கள் பரவலாகப் பகிரப்படுகின்றன. இவரது “கவனமாக இருங்கள்” என்ற எச்சரிக்கை வாசகம் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டதோடு பாடல்களில் கூட ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டிலிருந்து பொதுப் போக்குவரத்தில் திருட்டுகள் அதிகரித்துள்ளதாகவும், பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதாகவும் இத்தாலியின் உள்துறை அமைச்சகத்தின் செப்டம்பர் 2024 அறிக்கையை மேற்கோள் காட்டி பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் திருட்டுகள் 21% அதிகரித்துள்ளன. ஆனால் வெனிஸில் மட்டும் 38.8% அதிகரித்துள்ளது. திருட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். வெனிஸின் மெட்ரோவில் 94%, ரயில்களில் 81% மற்றும் பேருந்துகளில் 78% பிக்பாக்கெட் நடைபெற்றுள்ளது.
வெனிஸில் பிக்பாக்கெட் அதிகரிப்புக்கு 2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமே காரணம் என்று கூறப்படுகிறது. பிக்பாக்கெட் செய்பவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் முறையான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் அடுத்தடுத்த விசாரணையில் ஆஜராகவில்லை என்றால், குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சட்ட சீர்திருத்தம் சுற்றுலாவாசிகளை எளிதான இலக்காக மாற்றுவதாக போலி கருதுகிறார். ஏனெனில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வெனிஸுக்குத் திரும்ப வர வாய்ப்பில்லை. பிக்பாக்கெட்டுகளை எதிர்த்துப் போராடுவதற்கான இவரது அர்ப்பணிப்பு 1990-களில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இருந்த ஒரு துணிக்கடையில் பணிபுரிந்தபோது தொடங்குகிறது.
“ஆசிய பயணிகள் நிறைய பணத்தை எடுத்துச் செல்வதை மக்கள் அறிந்திருந்தனர். இதுதான் முதன்முதல் பிக்பாக்கெட் தொடங்கியதற்கு காரணமாக இருக்கிறது நேர்மையான குடிமகள் என்ற பெருமிததற்காக நான் இதைச் செய்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று பாலி கூறுகிறார். சந்தேகப்படும்படியான பிக்பாக்கெட்டுகளைத் துரத்துவதற்காக அவர் அடிக்கடி தெருக்களில் ரோந்து செல்கிறார். உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டாலும், பாலி தனது பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
December 16, 2024 6:09 PM IST
பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கும் துணிச்சல் பெண்.. குவியும் பாராட்டு!