Last Updated:
பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் திலீப் சங்கர். பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘பஞ்சாக்னி’ என்ற சீரியலின் படப்பிடிப்புக்காக திலீப் சங்கர் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். படப்பிடிப்பு இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட, அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
ஹோட்டலில் அறை எடுத்த பின், கடந்த இரண்டு நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஹோட்டல் தரப்பில் விசாரிக்கையில் அவர் இரண்டு நாட்களாக அறையில் இருந்து வெளியேறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஹோட்டல் அறையில் சோதித்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் திலீப் சங்கருக்கு உடல்ரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாக படக்குழு போலீஸிடம் தெரிவித்துள்ளது. தீவிர உடல்நலப் பிரச்சினையால் அவர் அவதிப்பட்டு வந்ததும் தெரிவித்துள்ளனர்.
அவரின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மரணத்தில் இயற்கைக்கு மாறான காரணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் தான் முடிவுகள் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
December 29, 2024 5:57 PM IST