Last Updated:
இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்தபோது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கொடி பறந்ததாகக் கூறப்படுவதால் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் போர்பன் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் திளைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 3.15 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் திடீரென்று டிரக் ஒன்று புகுந்தது.
இதில், பொதுமக்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, ஓட்டுநர் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால் அப்பகுதியே அலறல் சப்தங்களால் கதிகலங்கிப் போனது. உடனடியாக சுதாரித்துக்கொண்டு காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் H1B விசாவுக்கு ஆபத்து? கலக்கத்தில் இருக்கும் இந்தியர்கள்..!
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிகப் டிரக்கில் ஐஸ் பெட்டியில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தின்போது பிகப் டிரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டதாகவும், இந்த வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஷம்சுதீன் என்பதும், இவர் 13 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு முன் ஷம்சுதீன் பதிவு செய்திருந்த வீடியோக்களைப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர். அதில், ஷம்சுதீன் தனது விவாகரத்து குறித்துப் பதிவு செய்துள்ளார். முதலில் தனது குடும்பத்தினரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாகவும் ஷம்சுதீன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஷம்சுதீனின் தீவிரவாத இயக்கத் தொடர்புகள் குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
January 02, 2025 8:49 AM IST