புனேவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது.

விளம்பரம்

அணியின் ஸ்கோர் 231ஆக உயர்ந்தபோது, டாம் பிளண்டல் 41 ரன்களிலும் கிளென் பிலிப்ஸ் 48 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில் 255 ரன்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் , சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரே கைப்பற்றினர். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் வேகம் புனே மைதானத்தில் எடுபடமால் போனது.

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணி 34 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரோஹித் சார்மா 8 ரன்களில் சண்டனர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணியை சுப்மன் கில் மற்றும் ஜெய்ஷ்வால் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பித்தது.

இருவரும் அதி ரடியாக விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியா 96 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இந்த நல்ல தொடக்கத்தை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள தவறினர்.

விளம்பரம்

விராட் கோலி 17ரன்னிலும், ரிஷப் பந்த் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க – “வாழ்க்கையில் மோசமான ஷாட்” – நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை விமர்சித்த சஞ்சய்

வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னும், சர்ப்ராஸ் கான் 9 ரன்னும் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். 37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தேநீர் இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி 41.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

விளம்பரம்

இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், நியூசிலாந்து வெற்றி பெற 3 விக்கெட்டுகளும், இந்திய அணி வெற்றிக்கு 178 ரன்களும் தேவைப்படுகிறது.

.



Source link