புனேவில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கடந்த 12 ஆண்டுகளாக தொடரை இழக்காத இந்திய அணி இந்த முறை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து தனது 12 ஆண்டு ரெக்கார்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியாக பேட்டிங் செய்து 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், சுப்மன் கில் 23 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 60.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது-
இந்த டெஸ்டின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக நியூசிலாந்து அணி வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் எங்களை விடவும் நன்றாக விளையாடினார்கள். சில தருணங்களை நாங்கள் இந்த டெஸ்டில் பயன்படுத்த தவறி விட்டோம்.
நியூசிலாந்து ஏற்படுத்திய சவாலை சமாளிப்பதில் தோல்வி அடைந்துள்ளோம். இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை 255 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தோம். இது குறிப்பிடத்தக்க நிகழ்வு. நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் திறமையாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அணிக்கு நல்ல கம் பேக்கை கொடுத்தனர். இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் அல்லது பவுலர்கள் காரணம் என்று கூற மாட்டேன். இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள தோல்வி. மூன்றாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு திரும்புவோம். என்று கூறினார்
.