Last Updated:
இன்னும் 3 நாட்கள் ஆட்டம் உள்ளதால், இந்த போட்டி டிராவில் முடிவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவுக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது. நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடி எவ்வளவு அதிக ரன்கள் சேர்க்க வேண்டுமோ அவ்வளவு சேர்த்தால் மட்டுமே இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்க முடியும்.
சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
அவர் பும்ராவை பாராட்டி தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுவதுமாக இழந்தது.
இதன் விளைவாக, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் மிகப்பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 2 இடங்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே போட்டி காணப்பட்ட நிலையில், அதிரடியாக வெற்றிகளை குவித்து தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தற்போது இந்தியா அல்லது ஆஸ்திரேலியா இரு அணிகளில் ஏதேனும் ஒன்றுதான் தென்னாப்பிரிக்காவுடன் மோதும். இதனை தீர்மானிப்பதில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மேட்ச்சிலும் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து மோசமாக விளையாடுவதால், இந்திய பவுலர்களுக்கு அழுத்தம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வெற்றியும் தவறவிடப்படுகிறது. சிட்னி டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 181 ரன்களில் முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 32 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 141 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது, இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடித்துக் கொண்ட பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இன்னும் 3 நாட்கள் ஆட்டம் உள்ளதால், இந்த போட்டி டிராவில் முடிவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவுக்கு இன்னும் நான்கு விக்கெட்டுகள் கைவசம் உள்ளது. நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடி எவ்வளவு அதிக ரன்கள் சேர்க்க வேண்டுமோ அவ்வளவு சேர்த்தால் மட்டுமே இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்க முடியும்.
இதற்கிடையே பும்ராவின் வேகப்பந்துவீச்சாளர் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக, அவர் 100% உடல் தகுதியுடன் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள முன்னாள் பிரபல வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், “ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருந்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் போதும். ஆனால், பும்ரா உடல் தகுதியுடன் இல்லாவிட்டால், இந்திய அணி 200-க்கு மேல் ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும் அதனை ஆஸ்திரேலியா எளிதாக எட்டி விடும்” என்று கூறியுள்ளார்.
January 04, 2025 8:53 PM IST