Last Updated:
மேற்கத்திய இசையின் மும்மூர்த்திகளில் ஒருவராக பார்க்கப்படும் பீத்தோவனின் சிம்போனி இசை, 20 சதவீத புற்றுநோய் செல்களை அழித்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
பீத்தோவனின் படைப்புகள் கட்டுக்கடங்காமல் கொட்டும் உணர்ச்சியின் அலைகள் என்று அவரையும் அவரது இசையையும் அறிந்தவர்கள் கூறுவது உண்டு. தொலைபேசி அழைப்பு, லிஃப்ட் பயணங்கள் என இன்றும் அவரது ‘சிம்போனி’ எனப்படும் இசைக் கோர்வைகள் உலகம் முழுக்கவும் ஒலித்தபடியே இருக்கின்றன.
இதேபோல, எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தமான பீத்தோவனின் சிம்போனி, புற்றுநோய் செல்களை 20 சதவீதம் அழித்துள்ளதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் சிகிச்சையில் இசையின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மார்சியா ஆல்வ்ஸ் மார்க்வெஸ் கேபெல்லா என்பவர் தலைமையிலான அந்தக் குழு, இசைக்கு நடுவே புற்றுநோய் செல்களை வைத்து ஆராய்ச்சி செய்தனர். இதில், பீத்தோவனின் ஐந்தாம் எண் சிம்போனி இசைத் தொகுப்பு, ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜியோர்ஜி லிஜெட்டியின் ‘அட்மாஸ்பியர்ஸ்’ இசையும் இதே விளைவை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு மாபெரும் இசைமேதை மொஸார்ட்டின் ‘சொனாட்டா’ இசை, எதிர்பார்த்த அளவுக்கு புற்றுநோய் செல்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இசையின் தாளம், அதிர்வெண், செறிவு உள்ளிட்டவை புற்றுநோய் செல்கள் அழிந்ததற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பக் கட்டத்தில் உள்ள இந்த ஆராய்ச்சி, கதிர்வீச்சு சிகிச்சை இன்றி எளிய முறையில் மனிதர்களின் புற்றுநோய் பாதிப்பை குணமாக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், ஆய்வகத்தில் தான் இந்த சோதனைகளை நடத்தியதாகவும், அதன் முடிவுகளை புற்றுநோய் சிகிச்சையுடன் ஒப்பிட்டு தற்போது பார்க்க முடியாது என்றும் தலைமை ஆராய்ச்சியாளர் கேபெல்லா தெரிவித்துள்ளார்.
இப்படி, புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை கொண்ட சிம்போனி, இத்தாலியின் ஓபெரா இசை நாடகங்களில் பிறந்த ‘சின்ஃபேனியா’ என்ற இசை வடிவமாகும். பின்னர் அது, கச்சேரி இசையாக மாறி, ஒரே நேரத்தில் பல கருவிகளின் வழியாக பிறக்கும் சிம்போனி இசைக் கோர்வையாக வளர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த சிம்போனியை படைக்கும் ஆற்றல் ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு இல்லை என்ற விமர்சனத்தை உடைத்தவர் இளையராஜா.
அவரது முதல் சிம்போனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
January 13, 2025 6:37 PM IST