பெங்களூரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்ட நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி, சிறிது நேரத்திலேயே இந்திய அணியை விட முன்னிலை பெற்றது. கேப்டன் டாம் லாதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டேவன் கான்வே 91 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்புடன் 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது நியூசிலாந்து அணி.
இதில் ரச்சின் ரவீந்திரா தவிர மற்ற முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். சொற்ப ரன்களில் அவர்கள் ஆட்டமிழக்க, மறுபுறம் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி சதம் அடித்தார். சிக்ஸருடன் அவர் சதத்தை பூர்த்தி செய்த சமயத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்தார் டிம் சௌதி.
Also Read |
பெங்களூரு டெஸ்ட்.. பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பந்த்… காரணத்தை விளக்கிய ரோகித் சர்மா!
அவரும் ஒருபக்கம் அஸ்வின் ஓவரில் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார். 65 ரன்கள் எடுத்திருந்த போது டிம் சௌதி விக்கெட்டாக, நியூசிலாந்து அணி சில மணிநேரத்தில் ஆல் அவுட் ஆனது.
இறுதி விக்கெட்டாக வீழ்ந்த ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்த ரன்களை விட 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், சிராஜ் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
.