நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாதிலேயே ரிஷப் பந்த் வெளியேறியதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயமடைந்து, களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்திற்கு ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள காலில் மீண்டும் பந்து நேரடியாக தாக்கியதாகத் தெரிவித்தார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.
ரிஷப் பந்தின் காயமானது பெரிதளவில் இல்லை என்பதால், இன்றைய போட்டியில் அவர் மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். மேலும் 46 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது குறித்து பேசிய ரோகித் சர்மா, ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக கவலை தெரிவித்தார்.
வலுவான நிலையில் நியூசிலாந்து: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்ட நிலையில் நியூசிலாந்து அணி வலுவன நிலையில் உள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, சீட்டுக்கட்டு சரிந்தது போல், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. விராட் கோலி, சப்ராஸ்கான், கே.எல்.ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகிய 5 வீரர்கள் டக்அவுட் ஆகினர். அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 13 ரன்களும் எடுத்தனர்.
Also Read |
IND v NZ | நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா – 46 ரன்களுக்கு ஆல் அவுட்!
இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இது சொந்த மண்ணில் இந்திய அணி எடுத்த மிகக்குறைந்த ஸ்கோராகும். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதையடுத்து ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி, சிறிது நேரத்திலேயே இந்திய அணியை விட முன்னிலை பெற்றது. கேப்டன் டாம் லாதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டேவன் கான்வே 91 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
.