Last Updated:
பிரதமர் மோடி துவக்கி வைத்த எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தில் மாத ஊக்கத்தொகையுடன் வேலைக்குப் பயிற்சி வழங்கப்படும்.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில், கடந்த டிசம்பர் 9-ம் தேதி பிரதமர் மோடி ஒரு திட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்தத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் முழுக்க பெண்களை மையப்படுத்தியும், அவர்கள் வருமானம் ஈட்டவும் கொண்டுவரப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி பிரதமர் மோடி, ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியில் எல்.ஐ.சி. பீமா சகி எனும் திட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், பெண்கள் எல்.ஐ.சி. முகவர்களாக இணையலாம். அவர்களுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை மாத ஊக்கத்தொகையாகக் கொடுத்து பயிற்சி வழங்கப்படும்.
இந்தத் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஒரு மாதத்தில், அதாவது ஜனவரி 9-ம் தேதிக்குள் மொத்தம் 52,511 பெண்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 27,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆவணம் சரிபார்ப்பு எல்லாம் முடிந்து பயிற்சிக்கான சேர்க்கை ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்கள் பயிற்சி வழங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதல் ஆண்டில் மாதம் ரூ. 7,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 6,000 மற்றும் மூன்றாம் ஆண்டு மாதம் ரூ. 5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், பெண்கள் மாதாந்திர இலக்கை அடைந்தால் கமிஷன் அடிப்படையில் ஊக்கத்தொகையும் தனியே வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுடைய பெண்கள் இணையலாம். குறைந்தபட்சம் இந்தத் திட்டத்தில் இணைவோர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ஏற்கனவே எல்.ஐ.சி. முகவராக இருக்கும் குடும்பத்தில் யாரும் புதிதாய் இந்தத் திட்டத்தில் இணைய முடியாது.
ஆன்லைன் மூலமாகவும், அருகில் இருக்கும் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் நேரடியாகவும் எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தில் இணையலாம். இந்தத் திட்டத்தில் இணைவதற்குப் பெண்கள் தங்கள் வயதுக்கான சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். சான்றிதழ்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
January 10, 2025 9:31 PM IST