புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தெரிந்தும், அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை, அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம்தேதி தேதி வெளியிடப்பட்டது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு தெலங்கானா அரசு அனுமதி அளித்திருந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை மீறி அல்லு அர்ஜுன் சிறப்புக் காட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பிய நிலையில், அவரை தெலுங்கு திரையுலகத்தினர் அனைவரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்தை அல்லு அர்ஜுன் வழங்கினாலும், விபத்து நடந்ததற்கு அவர்தான் காரணம் என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தெலங்கானா சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை மஜ்லிஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அக்பருதீன் ஒவைசை எழுப்பினார். இதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பதிலளித்து பேசியதாவது-
புஷ்பா 2 சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜுன் வரக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி அவர் சென்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.
அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்று கொண்டு அவர் கையசைத்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறு செய்த அல்லு அர்ஜுன் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்? அவரிடம் வெளியேறாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்த பின்னர்தான் அவர் வெளியேறினார்.
அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா? கண் அல்லது கிட்னியைத்தான் இழந்தாரா? அவரது வீட்டிற்கு சென்று அவரை சினிமா பிரபலங்கள் பார்க்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது கவலைப்பட்டீர்களா? என்று சரமாரியாக ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
.