செயற்கை நுண்ணறிவு (AI) பதில்கள் என்றால் என்ன?

புதிய “AI பதில்கள்” அம்சங்களைப் பெற்று, போனின் கால் ஸ்கிரீனை ஒரு படி முன் நகர்த்தியுள்ளது கூகுள் நிறுவனம். இவர்களுடைய Phone செயலியின் சமீபத்திய பீட்டா பதிப்பு, AI மூலம் இயங்கும் பதில்களை உருவாக்கி வருகிறது என்பதற்கான குறிப்புகளைக் காட்டுகிறது. இது அழைப்பாளர்களுடன் புத்திசாலித்தனமாக பேசுகிறது.

சரி, இது எவ்வாறு செயல்படக்கூடும் என்பதை இங்கே பார்ப்போம். யாரேனும் அழைத்தால், உங்கள் ஃபோன் அதைத் திரையிட்டால், அழைப்பாளர் பேசுவதன் அடிப்படையில் AI பதிலளிக்கும். இனிமேல் ஒரேவிதமான பட்டியலிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, அழைப்பாளரின் செய்திக்கு ஏற்ப மிகவும் இயல்பான, மனிதரைப் போல் AI உருவாக்கிய பதிலைப் பெறுவீர்கள்.

இந்த பதில்கள் அனைத்தும் ஜெமினி நானோ மாடல் உட்பட கூகுளின் மேம்பட்ட மொழி மாதிரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. இது மனிதரைப் போன்ற இயற்கையான ஒலி உரையை உருவாக்க உதவுகிறது. முன்பை விட இந்த AI பதில்கள் மிகவும் சிக்கலான சூழலைக் கூட கையாண்டு பலவிதமான பதில்களை வழங்க முடியும் என சொல்லப்படுகிறது.

பிக்சல் போன்களில் கால் ஸ்கிரீன் என்ற அம்சம் ஏற்கனவே உள்ளது. இது உங்களுக்கு வரும் அழைப்புகளை நிர்வகிக்க உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இந்த அம்சம், கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் தெரியாத எண்கள் அல்லது டெலிமார்க்கெட்டர்கள் போன்ற தேவையற்ற அழைப்பாளர்களிடமிருந்து வரும் அழைப்புகளைத் திரையிட உங்களை அனுமதிக்கிறது.

இது அழைப்பாளரிடம் ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்பதோடு, அவர்களின் பதிலை உங்கள் போனின் திரையில் எழுத்துகளாகவும் காணலாம். இதை வைத்து நீங்கள் இந்த அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க உங்களை அனுமதிக்கிறது.

இதையும் படிக்க: 2025ஆம் ஆண்டில் ரூ.10,000க்குள் வாங்கக்கூடிய 5 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள்..! 

நாளடைவில் கால் ஸ்கிரீன் கொஞ்சம் ஸ்மார்ட்டாகிவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், கூகுள் கால் ஸ்கிரீனுக்கு “சூழலுக்கு ஏற்ற பதில்களை” அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​ஒருவருடனான அப்பாயின்மென்டை உறுதிப்படுத்த யாராவது உங்களை அழைத்தால், உங்கள் Pixel ஃபோன் “உறுதிப்படுத்து” அல்லது “அபாயின்ட்மென்ட்டை ரத்து செய்” போன்ற பொருத்தமான பதில்களை வழங்கக்கூடும். இதற்காக இனி தனியாக போன் செய்ய வேண்டியதில்லை.

இந்த AI பதில்களை சுற்றி கூகுள் சில பாதுகாப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பதால், சில நேரங்களில் துல்லியமற்றதாக இருக்கலாம் அல்லது அழைப்பாளரின் நோக்கத்தை தவறவிடலாம். பயனர்கள் இதைப் பற்றி அறிந்திருப்பதை உறுதிசெய்ய “இந்தத் தகவல் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, துல்லியமற்றதாக இருக்கலாம்” என்ற ஒரு மறுப்பும் Phone செயலியில் உள்ளது.

மேலும், இந்த அம்சம் போனில் தானாக இயங்காது. நாம் தான் Phone செயலியில் உள்ள செட்டிங்ஸில் போய் AI பதில்களை இயங்குமாறு மாற்றம் செய்ய வேண்டும். இப்போதைக்கு, இது பீட்டா பதிப்பில் உள்ள சோதனை அம்சம் மட்டுமே. எனவே, இது எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதையும் படிக்க: இந்தியாவில் அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள்… வாட்ஸ்அப் மூலம் மக்களை குறிவைக்கும் மோசடிக்காரர்கள்…!

இந்த வசதி அடிக்கடி அழைப்புகளால் தொல்லையுறும் நபர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கலாம். இந்த அம்சத்தின் மூலம், அழைப்புகளுக்கு பதிலளிக்க அல்லது நிராகரிக்க நீங்கள் நேரத்தைச் செலவளிக்க வேண்டியதில்லை. இதனால் நேரம் மிச்சமாவதோடு தேவையற்ற அழைப்புகளைக் குறைக்க முடியும். அன்றாடப் பணிகளை எளிதாக்குவதற்கு கூகுள் எவ்வாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இனி தொலைபேசியை எடுத்துப் பேசுவது ஒரு வேலையாக இருக்காது.



Source link