இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் என்ற சாதனையை நிகழ்த்தி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்தியாவுக்காக இதுவரை விளையாடிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (செப்டம்பர் 19) தனது அதிரடி பேட்டிங்கால் சரித்திரம் படைத்தார். 2007-ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு ஓவரில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை அடித்த தரமான சம்பவம் இதேநாளில் நடந்தது. சம்பவ இடம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானம். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சை துவம்சம் செய்து அவருக்கு பீதியின் உச்சத்தையே காட்டினார் யுவராஜ்.
இந்திய இன்னிங்ஸின் 19வது ஓவரில் யுவராஜின் இந்த முரட்டு சம்பவம் நடந்தது. அவரது அபாரமான ஆட்டத்தால் அன்று இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. யுவராஜ் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல், 12 பந்துகளில் யுவராஜ் அரைசதம் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடக்கம்.
அன்றைய தினம் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, முதலில் பேட்டிங் செய்து 18வது ஓவரின் முடிவில் 171/3 என்ற நிலையில் இருந்தது. அப்படியான தருணத்தில் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், யுவராஜ் சிங்கை ஸ்லெட்ஜிங் செய்தார்.
இதனால் இருவருக்குமிடையே வார்த்தை மோதல் உண்டானது. சூடாக இருவரும் வார்த்தைகளை வீசினர். அப்போது பிளின்டாஃப் மீது எழுந்த கோபத்தை மொத்தமாக அடுத்த ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராடிடம் காண்பித்தார் யுவராஜ்.
Also Read |
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி… இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் என்ன நடக்கும்?
அந்த ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை மைதானத்தின் நாலாப்புறமும் சிதறடித்தார். மைதானத்தில் இருந்த அத்தனை திசைகளிலும் பந்துகள் பறந்தன. பேக்வார்ட் ஸ்கொயர் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன், ஓவர் மிட் விக்கெட் என மைதானத்தின் எந்த திசையும் மிச்சம் வைக்கப்படவில்லை.
இப்படியாக 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் யுவராஜ். தற்போது வரை இதுவே உலக சாதனை. அன்றைக்கு யுவராஜின் ஸ்ட்ரைக் ரேட் 363.50. அப்படியான அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணி உட்பட எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார் யுவராஜ் சிங்.
இந்த போட்டிக்கு முன்னதாக சில மாதங்கள் முன்பு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் யுவராஜின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்திருப்பார்.
On this day in 2007, Yuvraj Singh smashed 6 “sixes” in an over against Stuart Broad in the T20 World Cup 2007.pic.twitter.com/3HNpwHSOzR
— Johns. (@CricCrazyJohns) September 18, 2022
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் மீதான கோபத்திலும் அன்றைய நாளில் ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே பறக்கவிட வேண்டும் என்ற வெறியோடு விளையாடினேன் என்று யுவராஜ் சிங் பின்னாளில் ஒரு பேட்டியில் இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தியிருந்தார்.
அப்படி, யுவராஜ் செய்த இந்த சம்பவத்துக்கு இன்று 17 வயது. இன்றுடன் 17 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களில் பலர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்திருந்தாலும், யுவராஜ் சிங் அடித்த சிக்ஸர்கள் மட்டும் பசுமரத்தாணி போல் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் ஒட்டிக்கொண்டுள்ளது.
.