மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை, தென்னாப்பிரிக்க அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் லாரா உல்வார்ட், அன்னெக் பாஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லாரா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வானவேடிக்கை காட்டிய பாஷ் 48 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா அணி நுழைந்தது.
சம்பவம் செய்த தென்னாப்பிரிக்கா: உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியே காணாத அணி ஆஸ்திரேலியா.
அதேபோல், கடைசி மூன்று முறையும் டி20 உலகக் கோப்பையை வென்ற அணியும் அதுவே. அதோடு, கடந்த 2009 டி20 உலகக் கோப்பை முதல் ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளிலும் விளையாடிய அந்த அணி, 2009-ல் மட்டுமே தோல்வி அடைந்தது. இப்படி மகளிர் கிரிக்கெட்டில் தனி ஆதிக்கம் செலுத்திவந்த ஆஸ்திரேலிய அணியின் ஒவ்வொரு சாதனைக்கும் நேற்று முற்றுப்புள்ளி வைத்தது தென்னாப்பிரிக்கா.
இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
.