மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி உள்ள ஓலா நிறுவனம், லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா, கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
அதுமட்டுமின்றி பவிஷ் அகர்வாலின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்தனர். ஏப்ரல் மாதத்தில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஓலா தனது ரைட்-ஹெய்லிங் செயல்பாடுகளை நிறுத்தியது. இந்த மாத தொடக்கத்தில், ஓலா எலக்ட்ரிக் அதன் இரண்டாவது காலாண்டில் ரூ.495 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.524 கோடியாக இருந்தது. ஆனால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
Also Read:
உங்ககிட்ட பான் கார்டு இருக்கா? கண்டிப்பா இந்த விவரங்களை தெரிஞ்சுக்கோங்க!
குவிந்த புகார்கள்
நிறுவனம் சமீபத்திய மாதங்களில் அதன் விற்பனைக்குப் பிந்தைய சேவையுடன் போராடி வருகிறது. இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 80,000 புகார்களை பெறுவதாகவும், அதன் சேவை மையங்கள் வேகத்தைத் தக்கவைக்க சிரமப்படுவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நீண்ட கால தாமதங்களை ஏற்படுத்துகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் விரக்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
Ola நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்ததால், அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகார்கள் சரி செய்யப்பட்டதாகவும், அதன் விற்பனை மற்றும் இணைந்த சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. செப்டம்பர் 2024 நிலவரப்படி 782 ஸ்டோர்களில் இருந்து மார்ச் 2025க்குள் 2,000 கடைகளாக விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வியாழன் அன்று, தேசிய பங்குச் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 3% குறைந்து ரூ.67.23 ஆக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
.