வெளிநாடுகளுக்கு தப்பியோடிய தொழிலதிபர்களிடமிருந்து சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து 22 ஆயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், “பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டுள்ளது. இதில், விஜய் மல்லையாவிடம் இருந்து மட்டும் ரூ.14,131 கோடி மீட்டு, அமலாக்கத்துறை வங்கிகளுக்கு திருப்பிக் கொடுத்துள்ளது.
அதேபோல், நீரவ் மோடியிடம் இருந்து ரூ.1,052.58 கோடி மீட்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் குற்றவாளிகளை விடவில்லை; பின் தொடர்கிறோம். பொருளாதாரக் குற்றவாளிகள் தப்பி ஓடினாலும் அமலாக்கத்துறை பின் தொடர்ந்து அவர்களின் சொத்துகளை மீட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Also Read | ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும் 9 காலை பழக்கவழக்கங்கள்!
அதேபோல், மெஹுல் சோக்சி மற்றும் பலரது வழக்குகளில் இரண்டாயிரத்து 565 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரக் குற்றவாளிகளைப் பின்தொடர்ந்து, வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய பணம் திரும்பப் போவதை உறுதி செய்வோம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
.