வழக்கமாகச் சுப முகூர்த்தத் தினங்கள், பண்டிகை நாட்கள், திருவிழா சமயங்களில் காய்கறிக்கான தேவை அதிகரிப்பதால் காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயரும்.
ஆனால் ஐப்பசி மாதத்தில் சுப நாட்கள் இருந்தாலும் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையில் பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியில் சில பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் உள்ளூர் காய்கறிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும் தற்போது காய்கறிகளின் விலை குறைந்து கட்டுப்படி ஆகும் விலையிலேயே விற்பனையாகின்றது.
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு நாட்டுக் காயான தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற அனைத்துக் காய்கறிகளும் மதுரை மற்றும் ஒட்டச்சத்திரம் போன்ற மார்க்கெட்டுகளில் இருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இதையும் படிங்க: அழகில் அசர வைக்கும் அசிலியா மலர்கள்… தாவரவியல் பூங்காவிற்குப் படையெடுக்கும் மக்கள்…
இது குறித்து வியாபாரி சசிகுமார் கூறுகையில், “தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை பொதுமக்களுக்குக் கட்டுபடியாகும் விலையிலேயே விற்பனையாகி வருகின்றது. மேலும், இஞ்சி கிலோ ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், பெரிய வெங்காயம் ரூ.80க்கும், கேரட் ரூ.80க்கும், அவரைக்காய் ரூ.80க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.30க்கும், நாட்டு பீட்ரூட் ரூ.40க்கும், பச்சை மிளகாய் ரூ.50க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், கத்தரிக்காய் ரூ.50க்கும், பாகற்காய் ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பீன்ஸ் ரூ.60க்கும், புடலங்காய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.60க்கும், முருங்கைக்காய் ரூ.70க்கும், உருளைக்கிழங்கு ரூ.50க்கும், பூண்டு ரூ.400க்கும், காலிஃப்ளவர் ரூ.50க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்துக் காய்கறிகளும் விற்பனை விலை குறைந்து காணப்படும் நிலையில் வெங்காயம் விலை உயர்ந்து காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.