20
– முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வருடாந்தம் ரூ. 1,100 மில்லியன் செலவீனம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக மக்கள் பணத்திலிருந்து ரூ. 1,100 மில்லியன் (வருடாந்தம் ரூ. 110 கோடி- மாதாந்தம் சுமார் ரூ. 9 கோடி) செலவிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மாத்திரம் வருடாந்தம் ரூ. 326 மில்லியன் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரின் ஒரு பகுதியின் நேற்றையதினம் (13) மீள பொலிஸ் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல்கள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு உரிய திணைக்களங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஊடகங்களில் செய்தி ஒன்று தற்போது பரவி வருகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் கொள்கை முடிவின்படி, பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை மற்றும் அதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவகாரங்களில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த செலவு ரூ. 1,100 மில்லியன் என அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வருடாந்தம் ரூ. 326 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது.
இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 இற்கு உட்பட்டு திருத்தியமைத்து பேண தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கைக்கு மேலதிகமாக, அவ்வப்போது குழு கூடி, மதிப்பீட்டு அறிக்கைகளை கோரி அதனை குறைப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகளின் உறுப்பினர்களும் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தில் வழக்கமான பொலிஸ் கடமைகளுக்காக ஏற்கனவே சுமார் 24,000 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. மேலும், இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த 2,000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிலிருந்து நீக்கப்பட்டு வழக்கமான பொலிஸ் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதிய அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், குற்றங்களை குறைத்தல் உள்ளிட்ட ஏனைய பணிகளுக்காக, பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு போதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த முடியும்.
பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் காலத்திற்கு காலம் மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்து அதற்கேற்ப மனித வள் மற்றும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துதல் பிரமுகர்
பாதுகாப்பின் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும்.
அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என அவதானிக்கப்படுகின்றது. என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK
Media-on-2024-12-13-at-1950-Former-Presidents-Security
Rizwan Segu Mohideen