Last Updated:

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோ, செஃப்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

News18

சொமேட்டோ, செஃப்டோ நிறுவனங்களுக்கு போட்டியாக 10 முதல் 15 நிமிட உணவு டெலிவரி செய்யும் ஸ்னாக் என்கிற புதிய ஆப்பை ஸ்விகி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் மக்களின் அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோ, செஃப்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களுமே விரைவான டெலிவரியை வழங்க போட்டி போட்டுக்கொண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், 10 முதல் 15 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் ஸ்னாக் (Snacc) என்கிற புதிய ஆப்பை ஸ்விகி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, 10 முதல் 15 நிமிட உணவு டெலிவரிக்காக ஸ்னாக் என்கிற புதிய ஆப்பை வடிவமைத்துள்ளது. முன்னதாக ஸ்விகியானது, போல்ட் என்கிற புதிய அம்சத்துடன் 10 நிமிட உணவு டெலிவரியை ஸ்விகி ஆப்பிலேயே வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது.  எனினும், ஸ்னாக் ஆப்பின் நோக்கமானது, விரைவான உணவக டெலிவரிகளை வழங்கும் ஸ்விகியின் தற்போதைய போல்ட் சேவையை விட இது இன்னும் வேகமான உணவு டெலிவரி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெங்களூருவில் தற்போது, நடைமுறையில் உள்ள ஸ்னாக் ஆப்பானது துரித உணவுகள், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஸ்னாக் ஆப், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. எனினும், ஸ்னாக்கின் அம்சமானது ஏற்கனவே செயலில் இருக்கும் பிளிங்கிட்டின் பிஸ்ட்ரோ மற்றும் செஃப்டோவின் செஃப்டோ கஃபே போன்ற ஒத்த அம்சத்தையே கொண்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுமே உணவு டெலிவரிக்கான தனித்துவமான ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சொமேட்டோவின் புதிய 15 நிமிட டெலிவரி:

சொமேட்டோ அதன் ஆப்பில் ஒரு புதிய 15 நிமிட உணவு டெலிவரி அம்சத்தை எந்தவித அறிவிப்பும் இன்றி, அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் விரைவான உணவு டெலிவரி சந்தையில் சத்தமில்லாமல் போட்டியை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த அம்சம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. புதிய “15 நிமிட டெலிவரி” ஆப்ஷனை சொமோட்டோ ஆப்பின் எக்ஸ்ப்ளோர் பகுதியில் காணலாம். இது பார்ட்னர் ரெஸ்டாரண்ட்களில் இருந்து விரைவாக தயாரிக்கக்கூடிய மற்றும் உடனடியாக சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகளை வழங்குகிறது.

இதற்கிடையே, ஆன்லைன் கேப் சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனமும், விரைவு உணவு டெலிவரி துறையில் நுழைந்துள்ளது, அதன் 10 நிமிட சேவையான ஓலா டேஷ் (Ola Dash) மூலம் நிறுவனத்தை விரிவுப்படுத்தியுள்ளது, இது ஆரம்பத்தில் பெங்களூருவில் தொடங்கப்பட்டது, இப்போது இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோமார்ட் மூலமாக விரைவான வர்த்தக சந்தையில் நுழைந்தது, மேம் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வதாக உறுதியளித்தது. இதற்கிடையில், ஃபேஷன் ஷாப்பிங் தளமான மிந்த்ரா (Myntra) பெங்களூருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், சில பிராண்டுகளுக்கு 30 நிமிட டெலிவரி சேவையை சோதனை முறையில் செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

மின்னல் வேக டெலிவரி.. சொமேட்டோ, செஃப்டோவுக்கு போட்டியாக ஸ்விகி களமிறக்கியிருக்கும் புதிய ஆப் ‘ஸ்னாக்’



Source link