மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா, இன்சைட் எட்ஜ் மற்றும் ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் போன்ற படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்ததற்காக அறியப்பட்ட சயானி குப்தா, அண்மையில் நேர்காணல் ஒன்றில் பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். குறிப்பாக முத்தக் காட்சி ஒன்றில், இயக்குநர் ‘கட்’ சொன்ன பிறகும் சக நடிகர் தன்னை தொடர்ந்து முத்தமிட்டதாக தெரிவித்தார்.
குவாபோன் கா ஜமேலா திரைப்படத்தின் விளம்பரத்தின்போது அவர் அளித்த நேர்காணலில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கும்போது, சக நடிகர்களின் ஒத்துழைப்பை எடுத்துரைத்தார். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் உள்ள நடைமுறைகளைப் போலவே பாலிவுட்டிலும் சக நடிகர்களின் ஒத்துழைப்பு இருப்பதாக பாராட்டு தெரிவித்த சயானி குப்தா, படப்பிடிப்புகளின்போது ‘லிமிட்’ஆக நடந்து கொள்வதற்கு மிகவும் உதவுவதாக கூறியுள்ளார். அத்துடன் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழலை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த சில குழப்பமான நிகழ்வுகளையும் சயானி நேர்காணலின்போது கூறினார். குறிப்பாக, முத்தக் காட்சி ஒன்றில் இணை நடிகர் ஒருவர் தன்னை நீண்டநேரம் முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும், இயக்குநர் ‘கட்’ சொன்ன பிறகும் அவர் தன்னை விட்டு விலகவில்லை என்றும் கூறிய சயானி, அந்த இணை நடிகரின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க: எப்படி இருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்படி ஆயிட்டாரே..! விவாகரத்துக்குப் பின் முதல் காணொலி…
அத்துடன், ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ் சீசன் 1 படப்பிடிப்பின்போது நடந்த மற்றொரு மோசமான சம்பத்தையும் சயானி குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் சுமார் 70 பேர் முன்னிலையில் மிகவும் கவர்ச்சியான உடையில் படுக்க வேண்டியிருந்தது என்றும், ஷாட் ஓகே ஆன பிறகு யாராவது தனக்கு ஒரு சால்வை வழங்குவார்கள் என்று நம்பியதாகவும், ஆனால் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். சில நேரங்களில் ஒரு நடிகையின் பாதுகாப்பு கடைசியாகவே கருதப்படுவதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என்றும் சயானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெருக்கமான காட்சிகளின்போது நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, அவர்களிடம் சம்மதம் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனநிலைக்கு அனைவரும் வரும் வரை நடிகைகள் பாதுகாப்பின்மை மற்றும் உணர்வின்மையை எதிர்கொள்வார்கள் என்றும் சயானி குறிப்பிட்டுள்ளார்.
.