மும்பை டெஸ்டில் அபாரமாக பந்து வீசிய இந்திய அணி நியூசிலாந்தின் விக்கெட்டுகளை அள்ளியுள்ளது. 2 நாட்கள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்கள் தாக்குபிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் டேரில் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 59.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் பந்த் 60 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
முதல் இன்னிங்சை விடவும் 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கி இன்று விளையாடியது. தொடக்க வீரர் கேப்டன் லாதம் 1 ரன்னில் ஆட்டமிழக்க, டெவோன் கான்வே 22 ரன்னில் வெளியேறினார். ரச்சின் ரவிந்திரா 4 ரன்களும், டேரில் மிட்செ 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வில் யங் 51 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். கிளென் பிலிப்ஸ் 26 ரன்களும், இஷ் ஜோதி 8 ரன்களும், மேட் ஹென்றி 10 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இன்றைய 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி 171 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணி 2 ஆவது இன்னிங்ஸில் இந்தியா விட 143 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
.