– நீர்த்தேக்கத்தின் கீழ் மட்டத்திலுள்ளோர் விழிப்புடன் இருக்கவும்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3ஆவது வான் கதவு இன்று (27) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் இரண்டு வான்கதவுகளை திறக்க நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள நீர் மட்டத்தின் அதிகரிப்பு காரணமாக நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளில் மூன்றை திறக்க பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயா நீர்த்தேக்கத்தின் வடிகால் திறந்து விடப்பட்டுள்ளதால் அதனை அண்மித்து காணப்படும் குடியிருப்பாளர்கள் மிக அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியிலுள்ள சென்கிளையார் நீர்வீழ்ச்சியிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்கத்தின் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, மழை தொடர்ந்தும் பெய்யுமானால், மேல் கொத்மலை அணைக்கட்டின் ஏனைய வான்கதவுகளும் தன்னிச்சையாக திறக்கும் எனவும் நீர்த்தேக்கத்தின் கீழ் கொத்மலை ஆற்றின் இரு மருங்கிலும் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(ஹட்டன் சுழற்சி நிருபர், தலவாக்கலை குறூப் நிருபர்)
(படங்கள்: ஹட்டன் ரஞ்சித் ராஜபக்ஷ)

சீரற்ற வானிலை; மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

The post மேல் கொத்மலை மூன்றாவது வான்கதவும் திறப்பு appeared first on Thinakaran.



Source link