சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணி புதிய சாதனை படைத்துள்ளது.
டி-20 உலகக் கோப்பை தொடர், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று கென்யாவில் நடைபெற்று வருகிறது. நைரோபியில் நடந்த லீக் போட்டியில் ஜிம்பாப்வே, காம்பியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் ருத்ர தாண்டவம் ஆடினர். இதனால், அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 344 ரன் குவித்தது.
இதற்கு முன், கடந்த ஆண்டு நேபாளம் அணி மங்கோலியாவிற்கு எதிரான போட்டியில் 314 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், அந்த சாதனையை ஜிம்பாப்வே முறியடித்தது.
அதைத்தொடர்ந்து கடின இலக்கை விரட்டிய காம்பியா அணி 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 290 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் டி-20 போட்டியை வென்ற அணி என்ற உலக சாதனையையும் ஜிம்பாப்வே படைத்து அசத்தியது.
இந்த போட்டியில் 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்த சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வே மொத்தம் 27 சிக்ஸர்கள் அடித்ததில், சிக்கந்தர் ராசா மட்டும் 15 சிக்ஸ் விளாசினார்.
இந்தப் போட்டியில் தகர்க்கப்பட்ட சாதனைகள்:
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் – 344 ரன்கள் .
டி20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – 290 ரன்கள் வித்தியாசம்.
டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் – 27 சிக்ஸர்கள்.
டி20 இன்னிங்ஸில் ஒரு அணி மட்டும் விளாசிய அதிக பவுண்டரிகள் – 30 பவுண்டரிகள் (ஜிம்பாப்வே மட்டும்).
டி20 போட்டிகளில் இரு அணிகளும் சேர்ந்து அதிக பவுண்டரிகள் விளாசல் – 57 (இரு இன்னிங்ஸும் சேர்த்து).
ஒரு டி20 இன்னிங்ஸில் அதிக அரைசதம் – 4 அரைசதம்.
டி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதம் – சிக்கந்தர் ராசா, 33 பந்துகளில் சதம்.
.