Last Updated:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருந்தனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மிக மோசமான ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படுத்தினார். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதனால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வரும் அவர் அடுத்ததாக ரஞ்சிக் கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
இந்த தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. அது மட்டும் இன்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருந்தனர்.
ஆனால் பேட்ஸ்மேன்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு தரப்படவில்லை. விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
இவர்களில் ரோகித் சர்மா மீது விமர்சனம் கடுமையாக எழுந்துள்ளது. கேப்டன்ஷிப் மட்டுமின்றி பேட்டிங்கிலும் ரோஹித் சர்மா தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார். தொடர் தோல்வியால் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.
இருப்பினும் அவர் அது பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார். இதே கருத்தை ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
January 05, 2025 12:24 PM IST