Last Updated:
ரோகித் சர்மா ரன் குவிக்க சிரமப்படுவதால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி பார்முக்கு வர வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் ஆலோசனை தெரிவித்திருந்தனர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தி இருந்த நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவர் விரைவில் தொடங்கவிருக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் விளையாடுவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடவை 1-3 என்ற கணக்கிலும் பறிகொடுத்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த கிரிக்கெட் தொடருக்கு பின்னர் பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது மோசமான ஆட்டத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில் இன்னும் சில மாதங்களுக்கு தனது கேப்டன் பொறுப்பை நீட்டிக்க வேண்டும் என ரோகித் சர்மா பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் ரோகித் சர்மா ரன் குவிக்க சிரமப்படுவதால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி பார்முக்கு வர வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் ஆலோசனை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ரஞ்சிக் கோப்பை மும்பை அணியுடன் ரோகித் சர்மா மும்பை வான்கிடே மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க – ரஞ்சி தொடரில் விளையாட தயாராகும் ரோஹித் சர்மா
முன்னதாக 2015 ஆம் ஆண்டின் போது உத்திரப்பிரதேசம் அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாடினார். அதன் பின்னர் தற்போது தான் உள்ளூர் போட்டிகளில் களமிறங்க உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
January 14, 2025 10:24 PM IST