ஆர்க்கிடெக்கான ஸ்ரேயா (நித்யா மேனன்) தனது காதலர் கரணை (ஜான் கொக்கன்) பதிவு திருமணம் செய்துகொள்கிறார். மறுபுறம் பெங்களூருவில் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணியாற்றும் சித்தார்த் (ரவி மோகன்) தனது காதலியை கரம்பிடிக்க ஆவலாக இருக்கிறார்.

இருவரின் வாழ்விலும் விதி விளையாட நினைத்த காரியங்கள் கைகூடாமல் போகிறது. இப்படியிருக்கும்போது, குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்ற மனநிலை கொண்ட சித்தார்த்தும் – குழந்தை வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஸ்ரேயாவும் ஒருவருக்கொருவர் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் ‘காதலிக்க நேரமில்லை’.

இன்றைய நவயுக காதலையும், காதலர்களின் மனநிலையையும், அதன் பரிணாமத்தையும் தமிழ் சினிமாவில் பேசப்படாத சில விஷயங்களையும் எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. வழக்கமான காதல் கதைக்குள் Gay Parenting, செயற்கை கருத்தரிப்பு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம், சிங்கிள் பேரண்ட், விந்து தானம், லிவிங் ரிலேஷன்ஷிப்ஐ நுழைத்திருப்பது கவனிக்க வைக்கிறது.

இதில் ‘Gay Parenting’ தமிழ் சினிமாவுக்கு புதுசு. கோலிவுட்டில் ஹீரோக்களுக்கான ஆயிரமாயிரம் ‘லவ் ஃபெயிலர்’ பாடல்களுக்கு மத்தியில் நாயகிக்கான காதல் தோல்வி பாடல் இயக்குநர் டச்!

மேற்கண்ட புதுமைகள் இருந்தாலும் மணிரத்னம், கௌதம் மேனன் படத்தின் சாயலை வார்த்திருக்கும் திரைமொழி அந்நியமாகிவிடுகிறது. படம் முழுக்க இருக்கும் அதீத ஆங்கில வார்த்தைகள், பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேவையோ இல்லையோ குடித்துக்கொண்டேயிருப்பது, பெங்களூரு, சென்னையில் உயர்தர அபார்ட்மென்ட்டுகளின் வாழ்வியலாக படம் முழுக்க குடியிருக்கும் ‘எலைட்’ திரைமொழியில் எமோஷனல் காணாமலாகிவிடுகிறது. அதுவே பார்வையாளர்களை ‘கனெக்ட்’ செய்ய விடாமல் தடுக்கிறதோ என தோன்றுகிறது.

யோகி பாபு ஓரிடத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தை கொச்சைப்படுத்துவது, உடல் ரீதியான கிண்டல்கள் முற்போக்கான கிருத்திகாவின் எழுத்து முரண்கள். குறிப்பாக இரண்டு தரப்பினருக்கான பிரிவிலும், திடீரென குழந்தை பெற்றுக்கொள்ள துடிக்கும் நித்யா மேனனின் முடிவிலும் எந்த அழுத்தமான காரணங்களும் இல்லை.

அதேபோல தன்னுடைய கொள்கை பிடிப்பில் உறுதியாக இருக்கும் ரவி மோகன் இறுதியில் அதை தளர்த்தும் முடிவும் சரியாக கடத்தப்படாதது மைனஸ். ஓரிடத்தில் படம் முடிந்த பின்பும், மீண்டும் அதை இழு இழு என இழுத்த க்ளைமாக்ஸ் அயற்சி. மோகன் ரவி, டி.ஜே.பானு, நித்யா மேனன் மூவருக்குமான காட்சிகளும், அதற்கான பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

அவசரகதியில் எடுக்கும் முடிவுகள், அதீத சிந்தனை, எதையும் சாத்தியப்படுத்தும் முனைப்பு, நொடியில் பற்றும் கோபம் என Gen Z தலைமுறையின் பிரதிநிதியாக நித்யாமேனன் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாதியை தனது வழக்கமான பாணியில் கையாண்ட ரவி மோகன், விரும்பிய பெண்ணுக்கும் விரும்பும் பெண்ணுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் காட்சிகளில் உணர்வுகளை அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார்.

அவருக்கும் சிறுவனுக்குமான பந்தம் ஃபீல்குட் உணர்வு. பெரும்பாலும் க்ளோசப் ஷாட்ஸ்களில் வந்து செல்லும் டி.ஜே.பானு நுணுக்கமான முக உணர்வுகளால் மனநிலையை அழுத்தமாக பதியவைக்கிறார். மேலோட்டமான வினய் கதாபாத்திரம் திணிப்பாக இருந்தாலும், நேர்த்தியான நடிப்பில் கவனிக்க வைக்கிறார். யோகிபாபுவுக்கு உடல்ரீதியான விமர்சனமே இன்னும் நகைச்சுவை. லால், வினோதினி, பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பில் நேர்த்தி.

‘இருங்க பாய்’ என சொல்லி ‘இழுக்குதடி’ பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் சம்பவம் செய்திருக்கிறார். கொண்டாட மனநிலையை தியேட்டரில் உருவாக்கிவிடுகிறது. இரண்டாம் பாதியில் மனதை தொடும் ஆங்கில பாடல் பிஜிஎம் ரசனை. உயர்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை கேவ்மிக் ஆரியின் கேமரா அழகியலுடன் ஒருவித ‘ரிச்’ தனத்துடன் பதியவைக்கிறது. இறுதி இன்னும் நறுக்கியிருக்கலாம் எடிட்டர் லாரன்ஸ்.

மொத்தமாக மார்டன் விஷயங்களை முற்போக்காக அணுகுகிறேன் என்ற இயக்குநரின் முனைப்பு ஓகே என்றாலும், அதனை இன்னும் ஆழமாகவும், முரண்களை களைந்தும், சொல்ல வந்த விஷயத்தில் அழுத்தத்தை கூட்டியிருந்தால் படத்தை காதலிக்க இன்னும் கூட நேரம் இருந்திருக்கும்!



Source link