Last Updated:
ரூ.1.36 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள நபரை திருமணம் செய்து கொண்ட பெண் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
வழக்கமாக பிரபல தொழிலதிபரைப் பற்றியும் அவரது வாழ்க்கை போராட்டங்களை பற்றியுமே நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக ஒரு பிரபல தொழிலதிபரின் மனைவியைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்தியாவின் முக முக்கியமான மருந்தக நிறுவன உரிமையாளரின் மனைவியான இவர், வறியவர்களுக்கு உதவுவதில் தொண்டுள்ளம் கொண்டவர். மேலும் இவர் ஃபேஷன் துறையிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் (SII) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அதார் பூனவல்லா, இந்தியாவின் ஒரு முக்கிய சமூகவாதி மற்றும் நன்கொடையாளரான நடாஷா பூனவல்லாவை மணந்தார். நடாஷா சீரம் இன்ஸ்டிடியூட் (SII) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு வில்லூ பூனாவல்லா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு பல்வேறு தொண்டு சேவை புரியும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்தக நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விற்பனைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 26, 1981-ல் பிறந்த நடாஷா, மகாராஷ்டிராவின் புனேவில் தனது மூத்த சகோதரர் அமித்துடன் வளர்ந்தார். இவரும் அதாரும் முதன்முறையாக கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சந்தித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு சைரஸ் மற்றும் டேரியஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். நடாஷா தனது பள்ளிப் படிப்பை புனேவில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் முடித்தார். அதன் பிறகு சாவித்ரிபாய் ஃபுலே புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ரூ.750 கோடி மதிப்பிலான ஆடம்பர மாளிகையான லிங்கன் ஹவுஸில் தம்பதிகள் இருவரும் வசித்து வருகின்றனர். வான்கனேர் மகாராஜாவுக்காக 1933-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் கிளாட் பேட்லே வடிவமைத்த இந்த மாளிகை, பல ஆண்டுகளுக்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு சுமார் ரூ.934 கோடிக்கு அதாரின் தந்தை சைரஸ் பூனவாலா இந்த மாளிகையை சொந்தமாக வாங்கினார்.
தொழில் வணிகம் மற்றும் தாராள குணத்துடன் நன்கொடை அளிப்பது ஆகிய இரண்டிலும் தன்னை ஒரு முக்கிய நபராக நிலைநிறுத்திக் கொண்டார் நடாஷா. இவரது தலைமையின் கீழ், சீரம் இன்ஸ்டிடியூட் (SII) நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. வறுமையில் வாடும் பின்தங்கிய சமூகங்களுக்கான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனது அறக்கட்டளையின் மூலம் சமூக காரணங்களுக்காகவும் அவர் உறுதியோடு பணியாற்றி வருகிறார்.
December 23, 2024 2:58 PM IST
ரூ.1.36 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள நபரை திருமணம் செய்து கொண்ட பெண்… இவரது கணவர் யார் தெரியுமா?