கூகுளில் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற உலகெங்கிலும் உள்ள பல பெரிய நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை பொறுப்பில் உள்ளனர். இவர்களில் பலர் சொந்தமாக நிறுவனங்களையும் உருவாக்கி பின்னர் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர்.
இந்த கட்டுரையில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அமெரிக்க நிறுவனத்தை வழிநடத்தும் இந்திய கோடீஸ்வரர் ஒருவரைப் பற்றி தன் தெரிந்துகொள்ளப் போகிறோம். அவரது பெயர் ராகேஷ் கங்வால்.
ரூ.1,52,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான இண்டிகோவின் (IndiGo) இணை நிறுவனர்.
சமீபத்தில் அமெரிக்க விமான நிறுவனமான சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் தலைவராக கங்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 71 வயதான இவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போர்டில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி இந்த விமான நிறுவனத்தின் 108 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.906 கோடி) மதிப்புள்ள 36 லட்சம் பங்குகளையும் வாங்கியிருந்தார்.
ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1984-ம் ஆண்டு யுனைடெட் ஏர்லைன்ஸில் தனது விமான கேரியரைத் தொடங்கினார். அதன்பின்னர் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவை உருவாக்கினார். ஐஐடி கான்பூரில் (1975) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் பட்டம் பெற்ற கங்வால், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றார். ஏப்ரல் 2022-ம் ஆண்டு, ஐஐடி கான்பூர் வளாகத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியை அமைப்பதற்காக ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக கங்வால் அறிவித்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, கங்வாலின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.46,255 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPF Scheme | இபிஎப் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!
விமானப் போக்குவரத்துத் துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த கங்வால், அமெரிக்க ஏர்வேஸ் குழுமத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் தலைமை இயக்க அதிகாரி (COO) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். இதுதவிர வேர்ல்ட்ஸ்பான் டெக்னாலஜிஸின் தலைவர், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
இண்டிகோ நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் ராகுல் பாட்டியாவிற்கும் கங்வாலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. 2019-ல் இந்த முரண்பாடுகள் பொதுவெளியில் தெரிய ஆரம்பித்தன.
இதனையடுத்து பிப்ரவரி 2022-ம் ஆண்டு, இண்டிகோவின் தாய் நிறுவனமான InterGlobe Aviation நிறூவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து கங்வால் ராஜினாமா செய்தார்.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் விமான நிறுவனத்திலுள்ள தன்னுடைய பங்கை கணிசமாக குறைக்கப் போவதாகவும் அறிவித்தார்.
ஆகஸ்ட் 2024-ம் ஆண்டு, கங்வால் மற்றும் அவரது குடும்ப அறக்கட்டளை இண்டிகோ நிறுவனத்தில் தங்களுக்குள்ள 5.83 சதவிகித பங்குகளை சுமார் ரூ.10,500 கோடிக்கு விற்றனர். பங்கு விற்பனைக்குப் பிறகு, இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தில் கங்வாலின் பங்கு 5.89 சதவீதத்திலிருந்து 5.31 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் சின்கர்பூ ஃபேமிலி டிரஸ்டின் பங்கு 13.49 சதவீதத்திலிருந்து 8.24 சதவீதமாகக் குறைந்து போனது.
.