Last Updated:
2027ஆம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ‘ஸ்டார் இந்தியா’ வைத்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் கோப்பை குறித்தான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியா, பாதுகாப்பு சிக்கல்களைக் காரணமாகக் கூறி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளது. இதனால், போட்டி ‘ஹைப்ரிட் மாடல்’ மூலம் நடத்தப்படலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
2027ஆம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ‘ஸ்டார் இந்தியா’ வைத்துள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை குறித்தான சிக்கலால், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகியவற்றில் ஏதாவது ஓர் அணி இந்தத் தொடரில் விளையாடாமல் போனால், பெரும் இழப்பு ஏற்படும் என ஸ்டார் இந்தியா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஆங்கில செய்தி நிறுவனமான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொகை மட்டும் ஐசிசி ஊடக வருவாயில் 90% என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
இந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி விளையாடாமல் பின்வாங்கினால், ஐசிசி உறுப்பினர்களுக்கு $750 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,300 கோடி) இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுவே பாகிஸ்தான் இந்தத் தொடரில் விளையாடாமல் போனால், ஐசிசி உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ‘ஹைப்ரிட் மாடல்’ மூலம் நடத்தலாம் என ஐசிசி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், ஆசிய கோப்பைக்கும் பாகிஸ்தான் அணி இந்தியா வராது எனத் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மேலும், போட்டியை மாற்றுவது ஐசிசியின் முழு அதிகாரத்துக்குள் உள்ளது. இதனை மிகப்பெரிய பிரச்சினையாகக் காட்டுவதற்கான அவசியமில்லை. சாம்பியன்ஸ் கோப்பை என்பது ஐசிசி சம்பந்தப்பட்ட ஒன்று. அதுவே ஆசிய கோப்பை என்பது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உரிமை. இரண்டும் தனித்தன்மை வாய்ந்தவை. ஐசிசி தொடர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
December 06, 2024 2:13 PM IST