சைரஸ் பூனாவல்லா இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர். இவர் மருத்துவத் துறையில், குறிப்பாக தடுப்பூசிகள் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளராக, உலகளாவிய தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு.
2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின்படி, சைரஸ் பூனாவல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.2,89,900 கோடி மதிப்பிலான சொத்துகள் வைத்துள்ளனர். 24.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 20,34,56,66,00,000 கோடி) சொத்து மதிப்பு கொண்ட இவரை, இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தரவரிசைப்படுத்தியுள்ளது.
பூனாவல்லா குடும்பம் ஆடம்பர ரியல் எஸ்டேட்டுக்காக அறியப்படுகிறது. மும்பையின் ப்ரீச் கேண்டி பகுதியில் உள்ள கடலோர மாளிகையான லிங்கன் ஹவுஸ் சைரஸுக்குச் சொந்தமான முக்கியமான சொத்தாக கருதப்படுகிறது. 2015ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இவர் வாங்கிய இந்த முக்கியமான சொத்து, ரூ.750 கோடிக்கு கையகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
1966-ம் ஆண்டில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவை நிறுவிய சைரஸ் பூனாவல்லா, உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்நிறுவனத்தை மாற்றினார். இவரது மகன் ஆதார் பூனவல்லா, 2011 முதல் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து அதன் தினசரி செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறார்.
ஆதாரின் தலைமையின் கீழ், சீரம் இன்ஸ்டிடியூட் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, பல முன்னேற்றங்களை கண்டுள்ளதோடு ஆண்டுதோறும் 1.3 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் போலியோ தடுப்பூசி போன்ற உயிர் காக்கும் தடுப்பூசிகளும் அடங்கும்.
இதையும் படிக்க:
PM Kisan : 19வது தவணை எப்போது? விவசாயிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்
சைரஸ் பூனாவல்லா புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கௌரவப் பட்டமும் பெற்றுள்ளார். தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்காக 1994-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்ற சீரம் இன்ஸ்டிட்யூட்டின் வெற்றிக்குப் பின்னால் தரமான மற்றும் விலை குறைவான மருத்துவ சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பு ஒரு உந்து சக்தியாக உள்ளது. 2000-ம் ஆண்டுவாக்கில், இவரது நிறுவனத்தின் தடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள இரண்டில் ஒரு குழந்தைகளின் நோய்த்தடுப்பிற்கு வழங்க பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் கணவன்கள்.. இந்தியாவில் இப்படி ஒரு விசித்திர கிராமமா!
சைரஸின் குடும்பம் குதிரை வளர்ப்பில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அவருடைய தந்தை சோலி பூனாவல்லா ஒரு புகழ்பெற்ற குதிரை வளர்ப்பாளர். சைரஸின் மகன் ஆதார், நடாஷா பூனாவல்லாவை மணந்தார். இவர் தற்போது பூனாவல்லா குழுமத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதோடு குடும்ப வணிகத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார். உயர்தர தடுப்பூசிகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் பாரம்பரியத்தை இவர்கள் இன்னும் தொடர்ந்தபடி இருக்கின்றனர்.
.