வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி அதிவேக 50 மற்றும் 100 ரன்கள் எடுத்து புதிய ரிக்கார்ட்டை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒருநாள் போட்டியைப் போல அதிரடியாக ரன்கள் குவித்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
மழை குறுக்கீடு காரணமாக 2 மற்றும் 3 ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறாத நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டம் கான்பூரில் நடைபெற்றது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருந்து ஆட்டத்தை தொடர்ந்தது.
அந்த அணியின் மோமினுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 194 பந்துகளை எதிர்கொண்ட அவர் 17 பவுண்டரி 1 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 74.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டை 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இந்த போட்டியில் குறிப்பாக தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவித்தனர்.
இந்திய அணி 3 ஓவரில் 50 ரன்களும், 10.1 ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட 50 மற்றும் 100 ரன்கள் இன்னிங்ஸாக இன்றைய ஆட்டம் மாறி புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது. 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, இன்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
.