இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கருப்பு மையில் வங்கி காசோலைகளை (Bank Cheques) எழுதுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறும் ஒரு பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த தகவல் உண்மைதானா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்தப் பதிவு வைரலான நிலையில், ரிசர்வ் வங்கி அப்படி கூற ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உண்டா என்று பலரும் கேள்வி எழுப்பினர். சிலர், அதற்கான காரணம் என்று தங்களது ஊகங்களை பகிர்ந்துள்ளனர். ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது.
பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB), சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், இந்த வதந்திகளை மறுத்துள்ளது. இது குறித்து பத்திரிகைத் தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, “கருப்பு மையில் வங்கி காசோலைகளை எழுதுவதைத் தடை செய்யும் உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. இந்தக் தகவல் முற்றிலும் தவறானது. காசோலைகளில் எழுதுவதற்கென குறிப்பிட்ட மை நிறம் குறித்து ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை” என்று அந்த பதிவு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும், துல்லியமான மற்றும் சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்புமாறு பத்திரிகைத் தகவல் அலுவலகம் மக்களை வலியுறுத்தியது. அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
காசோலைகளை எழுதுவது பற்றி ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
ரிசர்வ் வங்கியின் காசோலை துண்டிப்பு முறை (CTS) படி, வாடிக்கையாளர்கள் காசோலைகளை எழுதும் போது புகைப்படத்திற்கு ஏற்ற மற்றும் நிரந்தர மையை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது காசோலை தெளிவாக இருப்பதை உறுதி செய்வதற்கும், சேதப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். இருப்பினும், காசோலைகளில் குறிப்பிட்ட மை அல்லது நிறங்களை கட்டாயமாக்கும் அல்லது தடைசெய்யும் எந்த விதிகளையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
இதையும் படிக்க: FDக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்கும் 10 இந்திய வங்கிகள்…!
பணம் பெறுபவரின் பெயர் அல்லது தொகை (எண்கள் அல்லது வார்த்தைகளில்) போன்ற காசோலையின் முக்கியமான விவரங்களில் எந்த மாற்றங்களும், திருத்தங்களும் செய்ய முடியாது என்பதையும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை காசோலையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால், புதிய காசோலையை தான் பயன்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை, மோசடியைத் தடுப்பதையும், காசோலை பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காசோலை என்றால் என்ன?
காசோலை என்பது வாடிக்கையாளர்கள் தாங்கள் பணம் செலுத்த வேண்டியவருக்கு நேரடியாக பணம் கொடுப்பதற்கு பதிலாக, காசோலையை கொடுத்து பணத்தை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பெற உதவும் ஒரு முறை. எச்டிஎஃப்சி (HDFC) வங்கியின் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளவாறு, ஒரு காசோலை, காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வங்கிக்கு அறிவுறுத்துகிறது. இது பரிவர்த்தனைகள் மற்றும் கொடுப்பனவுகளுக்கு ஒரு பாதுகாப்பான முறையாக இருக்கிறது.
இதையும் படிக்க: SBI Bank | எஸ்பிஐ வங்கியில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் பெற என்னென்னெ தகுதிகள்? – முழு விவரம் இதோ!
போலி தகவல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும், புதுப்பிப்புகளுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிடவும் பத்திரிகை தகவல் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சமீபத்திய வதந்தி, ஆன்லைனில் பகிரப்படும் தகவல்களை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பாக, உண்மையை சரிபார்க்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
January 26, 2025 8:16 AM IST