பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது (பிபிஎஃப்) முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத கவர்ச்சிகரமான தேர்வாக இருந்து வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) என்பது இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பிரபலமான நிலையான சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்ட கால சேமிப்புக்கு இது ஒரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.
சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ்வரும் பிபிஎஃப்-ல், வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும். நிலையான வருமானத்தை வழங்கும் அல்லது சந்தையுடன் இணைக்கப்பட்ட சில நிலையான வருமான கருவிகளைப் போலல்லாமல், பிபிஎஃப் பயனர்களுக்கு ஒரு நம்பமான உத்தரவாதத்தை வழங்குகிறது,.இது முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத கவர்ச்சிகரமான தேர்வாக உள்ளது.
பிபிஎஃப்-ன் முக்கிய அம்சங்கள்
முதலீட்டு வரம்புகள்:
ஒரு பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தது 500 ரூபாய் வரை முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
கால வரம்பு:
பிபிஎஃப் முதலீடுக்கு 15 வருட லாக்-இன் காலம் உள்ளது. திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு, முதலீட்டு காலத்தை ஒருவர் நீட்டிக்க விரும்பினால், நீட்டிப்புப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம், காலவரையின்றி 5 ஆண்டுகள் வரை பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க முடியும். இதன் மூலம், கூடுதல் வருமானத்தை ஈட்ட உதவும் சிறந்த மற்றும் நெகிழ்வான நீண்ட கால தேர்வாக இது இருக்கிறது.
வரி: பிபிஎஃப் விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) வரி முறையைப் பின்பற்றுகிறது. இதன் பொருள்:
- முதலீடு செய்யப்பட்ட அசல் தொகைக்கு வரி கிடையாது.
- பெறப்படும் வட்டிக்கும் வரி கிடையாது.
- முதிர்வுத் தொகை அல்லது பணம் எடுப்பதற்கு எந்த வரியும் இல்லை.
- இந்தியாவில் இருக்கும் முற்றிலும் வரி இல்லாத சில முதலீட்டு விருப்பங்களில் பிபிஎஃப் திட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தில் சேர்வதற்கான தகுதி:
- 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம்.
- மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர்களுக்கு அவர்களது பாதுகாவலர்கள் பிபிஎஃப் கணக்கை திறக்கலாம்.
2025 ஜனவரியில் பிபிஎஃப் வட்டி விகிதம்
சமீபத்திய மதிப்பாய்வின்படி, பிபிஎஃப் திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1%ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்படும். எனினும், இதன் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டும் மத்திய அரசால் திருத்தங்களுக்கு உட்பட்டது.
பிபிஎஃப்-இல் பணத்தை எடுப்பது எப்படி?
முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறுதல்:
- கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் விரும்பினால் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறலாம்.
- திரும்பப் பெறுவதற்கான வரம்பு: எது குறைவாக இருந்தாலும், 4வது ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டு, இருப்பில் இருந்து 50% வரை, ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படும்.
முதிர்வு திரும்பப் பெறுதல்:
15 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுத் தொகையை திரும்பப் பெறுவது குறித்து சில குறிப்பிட்ட விருப்பங்கள் உள்ளன.
- முழுவதுமாக திரும்பப் பெறுதல்: முழுவதுமாக திரும்பப் பெறுவதற்கு, மூடல் படிவம் மற்றும் பாஸ்புக்கை தபால் அலுவலகம் / வங்கியில் சமர்ப்பித்து கணக்கை மூடலாம்.
- டெபாசிட்கள் இல்லாமல் இருப்பை வைத்திருக்கலாம்: பிபிஎஃப் கணக்குக்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படுவதால், உங்களது தேவைக்கேற்ப நீங்கள் திரும்பப் பெறலாம்.
- கணக்கை நீட்டித்தல்: கூடுதல் வைப்புத்தொகையுடன் அல்லது ஏற்கனவே இருக்கும் இருப்பை வைத்து கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க, முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள் நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
பிபிஎஃப்-ல் முதலீடு செய்வது எப்படி?
கணக்கைத் திறக்கவும்:
எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளையிலும் நீங்கள் பிபிஎஃப் கணக்கை திறக்கலாம். சில வங்கிகளில் ஆன்லைன் மூலம் கணக்கை திறக்கும் வசதியும் உள்ளது.
இதையும் படிக்க: பெங்களூருவின் முதல் 5 பணக்காரர்கள் யார் தெரியுமா…? விவரங்கள் இதோ…!
டெபாசிட் பணம்:
- டெபாசிட்களை மாதாந்திர, காலாண்டு அல்லது மொத்த தொகையாக ஒரு ஆண்டில் (குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் )வரை முதலீடு செய்யலாம்.
- பணம், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் அல்லது ஆன்லைன் மூலம் இதற்கு பணம் செலுத்தலாம்.
- வருமானத்தை அதிகரிக்க, முழு ஆண்டு வட்டியிலிருந்து பயனடைய நிதியாண்டின் ஆரம்பத்தில் முதலீடு செய்யுங்கள்.
பிபிஎஃப் கால்குலேட்டர்
பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எவ்வளவு சேகரிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள, பிபிஎஃப் கால்குலேட்டர் மூலம் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
உதாரணமாக, ஆண்டு முதலீடு: ரூ 1,50,000 (அதிகபட்ச வரம்பு).
வட்டி விகிதம்: 7.1% (ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது).
கால வரம்பு: 15 ஆண்டுகள் (லாக்-இன் பீரியட்).
பிபிஎஃப் கணக்கீடு:
பிபிஎஃப் கூட்டு வட்டியைப் பயன்படுத்துகிறது:
A = P × (1 + r/n)^(nt) இதில், A என்பது முதிர்வுத்தொகை, P என்பது ஆண்டு வைப்பு நிதி, r என்பது வருடாந்திர வட்டி விகிதம் (அதாவது 7.1% = 0.071), n என்பது ஒரு வருடத்தில் வட்டி கூட்டும் முறைகளின் எண்ணிக்கை (பிபிஎஃப்க்கு n = 1) மற்றும் t என்பது ஆண்டுகளின் எண்ணிக்கை ஆகும்.
இதையும் படிக்க: 1, 3, 5 வருட FD திட்டங்களுக்கு SBI வழங்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு…?
15 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி முதிர்வுத் தொகை:
மேற்குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி, ரூ.1,50,000 ஆண்டுதோறும் 7.1% வட்டியில் டெபாசிட் செய்யப்பட்டால் கிடைக்கும் மொத்த தொகையை இங்கே பார்ப்போம்.
முதிர்வுத் தொகை (A) ≈ ரூ 40,68,209
மொத்த முதலீடு: ரூ 22,50,000 (ரூ 1,50,000 × 15 ஆண்டுகள்)
பெறப்படும் மொத்த வட்டி: ரூ.18,18,209
ஆன்லைன் பேங்கிங் அல்லது பாஸ்புக் அப்டேட் மூலம் உங்கள் பிபிஎஃப் கணக்கு இருப்பு மற்றும் முதிர்வு காலத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஓய்வூதியம் குறித்து திட்டமிடுதல் அல்லது சேமிப்பை உருவாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பாதுகாப்பான, வரி இல்லாத, நீண்ட கால முதலீட்டு விருப்பத்தைத் தேடும் நபர்களுக்கு பிபிஎஃப் சிறந்த சேமிப்புத் திட்டமாகும்.
January 08, 2025 5:18 PM IST
பிபிஎஃப் – வரிச்சலுகையுடன் கூடிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சிறந்த சிறுசேமிப்புத் திட்டம்…!