நடிகர் விக்ரம், அசின், மணிவண்ணன், பசுபதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து 2005ல் தமிழில் வெளியான படம் ‘மஜா’. மலையாளத்தில் ஹிட் அடித்த ‘தொம்மனும் மக்களும்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘மஜா’. மலையாளத்தில் ‘தொம்மனும் மக்களும்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷாபியே ‘மஜா’ படத்தையும் இயக்கியிருந்தார். மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஷாபி.

‘கல்யாணராமன்’, ‘புலிவால் கல்யாணம்’, ‘தொம்மனும் மக்களும்’, ‘மாயாவி’, ‘சட்டம்பிநாடு’, ‘சாக்லேட்’, ‘மேரிக்குண்டோரோ குஞ்சாடு’, ‘மேக்கப் மேன்’, ‘டூ கன்ட்ரீஸ்’ போன்ற படங்கள் அவர் இயக்கியதுதான்.

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷாபி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

பல நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த ஷாபி, மருத்துவ உதவியை நாடினார். பரிசோதனைக்கு பின், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்த நிலையில் தான் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஷாபி உயிரிழந்தார்.

சினிமாவில் உதவி இயக்குநராக வாழ்க்கையை தொடங்கிய ஷாபி, இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். காமெடி கலந்த குடும்ப திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான ஷாபியின் படம் பெரும்பாலும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் படங்களாக அமைந்தன.

இதனால், மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, திலீப், ஜெயசூர்யா போன்ற சூப்பர்ஸ்டார்களுடன் பணியாற்றினார்.

Also Read | JanaNayagan | தளபதி 69 படத்திற்கான தலைப்பு வெளியீடு..! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

ஒருகட்டத்தில் திரையுலகில் ஏற்பட்ட பிரச்சினையால் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்த ஷாபியை ‘மஜா’ படம் ரீமேக் மூலம் சினிமாவுக்கு மீண்டும் அழைத்து வந்தார் விக்ரம். அதன்பின் ஷாபி தொட்டதெல்லாம் பொன்னானது.

இந்தநிலையில் தான் உடல் நலக்குறைவால் ஷாபி மரணமடைந்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 56.



Source link