Last Updated:
இரு விண்கலன்கள் இணைப்புத் திட்டத்தின் கட்டளைகளில் சில பிரச்சினைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தரத்தில் சுழன்று வரும் இரண்டு விண்கலன்களை இணைக்கும் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வரும் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதற்கு முதற்படியாக ஸ்பேடெக்ஸ் என்ற திட்டம் கருதப்படுகிறது. ஸ்பேடெக்ஸ் திட்டமானது இரு விண்கலன்களை அந்தரத்தில் ஒன்றுடன் மற்றொன்றை இணைப்பதாகும். ஸ்பேடெக்ஸ் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 30 ஆம் தேதி இரவு 10 மணிக்கு பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் இருந்து ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரண்டு விண்கலன்கள் வெற்றிகரமாக பிரிந்து சென்றன. விண்ணில் சுழன்று வரும் இரண்டு விண்கலன்கள் இணைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இணைக்கப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இரு விண்கலன்களையும் இணைப்பது தொடர்பான பரிசோதனைகளை இஸ்ரோ அதிகாரிகள் செய்து வந்தனர். திங்கட்கிழமை நடந்த பரிசோதனையில் இணைப்புத் திட்டத்தின் கட்டளைகளில் சில பிரச்சினைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மேலும் தரவுகளை ஆராய வேண்டியுள்ளதால் ஸ்பேடெக்ஸ் திட்டம் வரும் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
January 06, 2025 9:59 PM IST