விண்வெளி ஆராய்ச்சியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2035-க்குள் பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் என்ற விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆராய்ச்சிகளை இஸ்ரோ செய்து வருகிறது. இதற்காக விண்ணில் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில், போயம் அதாவது PSLV Orbital Experimental Module எனும் பரிசோதனை முயற்சிக்காக 24 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு விண்வெளி ஆய்வு மையத்துக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க உள்ளன. இந்த வகையில், புவி ஈர்ப்பு விசையே இல்லாத பகுதியில் தாவரங்களை வளர்ப்பதற்கான முதற்கட்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கிய கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் 8 காராமணி விதைகள், 4 நாட்களில் முளைக்க தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கிராப்ஸ் கருவியை பொறுத்தவரை, தானியங்கி செயல்பாடுகளுடன் கூடிய மூடப்பட்ட பாகங்களை கொண்டது. இதில் உள்ள சிறப்பு பேலோட்டுகளில் சிறிய அளவு மண்ணில் 8 காராமணி விதைகள் விதைக்கப்பட்டன.

Also Read | Vishal | ‘கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி வீடியோவால் ரசிகர்கள் கேள்வி

அவற்றிக்கு தேவையான வெப்பநிலை, ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, சுற்றுச்சூழல் ஈரப்பதம், மண்ணின் ஈரப்பதம் ஆகியவை சீராக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விதைகளின் வளர்ச்சியை கண்காணிக்க கேமராவையும் கொண்டுள்ளது.

பொதுவாக காராமணி ஒரு வாரத்துக்குள் முளைத்து இலைகள் துளிர்த்துவிடும் என்ற காரணத்துக்காக அதன் விதையை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார் ஆராய்ச்சியாளர் வெங்கடேஸ்வரன். இது போன்ற ஆய்வுகளின் மூலம் திறமையை நிரூபித்தால் தான் சர்வதேச ஆய்வுகளில் இணைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் மற்றொரு சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைய வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

ஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில் செடிகளை நேராக வளர்ப்பது முக்கிய சவாலாக பார்க்கப்பட்டாலும், இதில் இஸ்ரோ தொடக்க நிலையில்தான் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நாசா தங்கள் விண்வெளி மையத்தில் தக்காளி, பச்சை மிளகாய் என காய்கறிகள், பூக்கள், கீரைகள் உள்ளிட்ட தாவரங்களை வளர்த்து அறுவடையும் செய்துள்ளது.

அதற்கான தொழில்நுட்பங்களை சர்வதேச விண்வெளி மையங்கள் ரகசியம் காத்து வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் தங்களின் விண்வெளி வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இஸ்ரோவும் இந்த சோதனை மேற்கொள்வது அத்தியாவசியமாகி உள்ளது.





Source link