Last Updated:
US Election | அமெரிக்காவில் பல நேரங்களில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர்கள் அதிபராக பதவியேற்க முடியாமல் போனதுண்டு.
வித்தியாசமான தேர்தல் முறையை கொண்ட அமெரிக்காவில், பல நேரங்களில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர்கள் அதிபராக பதவியேற்க முடியாமல் போனதுண்டு. அந்த தேர்தல் முடிவுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…
1824-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜான் குயின்சி ஆடம்ஸ், ஆண்ட்ரூ ஜாக்சன், வில்லியம் எச். க்ராஃபோர்ட் மற்றும் ஹென்றி உள்ளிட்டோர் களம் கண்டனர். அந்ததேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக பிரதிநிதிகள், சபை உறுப்பினர்கள் வாக்களித்து அதிபரை தேர்வு செய்தனர். அதில் ஜான் குயின்சி ஆடம்ஸ் வெற்றி பெற்றார். ஆனால் பொது வாக்குகளின் படி, ஆண்ட்ரூ ஜாக்சனே அதிபராகியிருக்க வேண்டும். ஆடம்ஸ் 31 சதவிகித வாக்குகளும், ஜாகசன் 43 சதவகித வாக்குகளும் பெற்றிருந்தனர்.
ரதர்ஃபோர்ட் பி.ஹேய்ஸ் மற்றும் சாமுவேல் ஜே.டில்டன் போட்டியிட்ட 1876 தேர்தலில் புளோரிடா, லூசியானா மற்றும் தென் கரோலினா மாகாணங்களில் வெற்றியை தீர்மானிக்க முடியவில்லை. இதனால் தேர்தல் குழு அமைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் அதிபர் பதவி ஹேய்ஸ்-க்கு வழங்கப்பட்டது. ஆனால் டில்டனுக்கு 51.12 சதவிகித வாக்குகளும், ஹேய்ஸ்சுக்கு 48 சதவிதிக வாக்குகளும் கிடைத்திருந்தன.
Also Read: US Election : இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றியை முடிவு செய்யும் முக்கிய மாகாணங்கள்
இதேபோல் 1888-ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த குரோவர் கிளீவ்லேண்ட் குடியரசுக் கட்சியின் பெஞ்சமின் ஹாரிசனை எதிர்கொண்டார். அதிக பொது வாக்குகளை பெற்றபோதும் குரோவர் தோல்வியடைந்தார். 2000ஆம் ஆண்டு தேர்தலில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தான் முடிவை அறிவிக்க வேண்டியிருந்தது. அத்தேர்தலில் மோதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் அல்கோர் 48.38 சதவிகித வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜார்ஜ் புஷ் ஜூனியர் 47.87 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தார். புளோரிடா மாகாணத்தில் புஷ் 0.5 சதவிகித வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக்கோரி அல்கோர், புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் முடிவில் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புஷ்-ஷூக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
மேலும், 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டெனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 48.18 சதவிகித வாக்குகளும், டிரம்ப் 46.09 சதவிகித வாக்குகளும் பெற்றனர். எனினும் எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளின் படி டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
November 05, 2024 8:45 AM IST
US Election : வித்தியாசமான தேர்தல் முறையை கொண்ட அமெரிக்கா.. அதிக வாக்கு பெற்றும் தோல்வி.. முழு விவரம் இதோ!