Last Updated:
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ பிப்ரவரி 6 வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெற்றதை போன்ற பிம்பம் ஏற்பட்டதாலும், விடாமுயற்சி தாமதம் எனத் தவறான தகவலாலும் வருந்தினேன்” என இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நியூஸ் 18-இன் டிஸ்கோ வித் கேஎஸ் பகுதியில் ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடனான உரையாடலில், விடாமுயற்சி படப்பிடிப்பின் அனுபவங்கள் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி மனம் திறந்தார்.
அப்போது அவர் கூறுகையில், “விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெற்றதை போன்ற பிம்பம் ஏற்பட்டது. மேலும் விடாமுயற்சி தாமதம் எனத் தவறான தகவலால் வருந்தினேன்.
மொத்த படப்பிடிப்பே 121 நாட்கள்தான் நடைபெற்றது. பாடல்கள், ஸ்டண்ட் தவிர்த்து 68 நாட்கள்தான் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘விடாமுயற்சி’ கால தாமதம் காரணமாக ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பை ஆரம்பித்தார் அஜித்.
கார் பந்தய பணிகளுக்காக ஒரே நேரத்தில் 2 படப்பிடிப்புகளில் பங்கேற்றார். ஒரு வாரத்துக்கு தூக்கமின்றி அஜித் பணியாற்றினார். விடாமுயற்சி படம் ஆக்ஷன், திரில்லர் வகையிலான திரைக்கதையாக இருக்கும். மேலும், பெண்களுடன் உரையாடும் திரைப்படமாக விடாமுயற்சி இருக்கும்.
ஆணாதிக்க மனநிலையை விலக்கிவிட்டு திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார். படப்பிடிப்பில் கார் விபத்தின் போது ஏற்பட்ட மனநிலையை விவரித்த மகிழ், எதிர்பாராத பெரும் விபத்தால் நாங்கள் ஸ்தம்பித்துவிட்டோம். 30 நிமிடங்களில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க அஜித் உத்வேகம் அளித்தார் என்றார்.
January 29, 2025 9:55 AM IST